ADVERTISEMENT

சர்ச்சையில் சிக்கிய அரசுப் பள்ளி; திமுக பிரமுகர் கைது! 

10:47 AM Jan 06, 2024 | tarivazhagan

சேலம் அருகே, அரசுப்பள்ளி பெண் ஆசிரியரிடம் சாதி மோதலில் ஈடுபட்டதாக தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தாக்கியதாகக் கூறப்பட்ட புகாரில், பெண் ஆசிரியர் திடீரென்று தலைமறைவாகிவிட்ட சம்பவத்தால், இப்பள்ளியை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

ADVERTISEMENT

சேலம் செவ்வாய்பேட்டை முத்துசாமி தெருவைச் சேர்ந்தவர் உமா (42). இவர், சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகே உள்ள லகுவம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வீரபாண்டி ஒன்றிய திமுக பிரதிநிதி தம்பிதுரை (56). இவரின் மகள், இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய மனைவி ரதியா, இதே பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் சமையலராகப் பணியாற்றி வருகிறார். இது மட்டுமின்றி, தம்பிதுரை இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினராகவும் இருக்கிறார். இதனால் லகுவம்பட்டி அரசுப் பள்ளிக்கு தினமும் சென்று வருவதோடு, பள்ளி நிர்வாக விவகாரங்களிலும் அடிக்கடி வலியச் சென்று மூக்கை நுழைப்பார் என்று சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஜன. 2ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார் தம்பிதுரை. அப்போது ஆசிரியர் உமா, தன்னுடன் பணியாற்றி வரும் சக ஆசிரியர் சந்தோஷ்குமார் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதைப் பார்த்த அவர், தனது அலைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளார். இதைக் கவனித்துவிட்ட ஆசிரியர் உமா, அவரைக் கண்டித்தார்.

சந்தோஷ்குமார்
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், உமாவுக்கு ஆதரவாக ஆசிரியர் சந்தோஷ்குமாரும், தம்பிதுரையை அலைப்பேசியில் படம் பிடித்துள்ளார். ஆத்திரம் அடைந்த தம்பிதுரை, அவர்களிடம் இருந்து அலைப்பேசியை பிடுங்க முயன்றபோது, ஆசிரியர் உமாவின் கையைப் பிடித்து முறுக்கியதாகத் தெரிகிறது. இந்த களேபரத்தில் சந்தோஷ்குமார், திமுக பிரமுகர் தம்பிதுரையை தள்ளி விட்டதில் அவர் கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கு வெளியே சென்ற தம்பிதுரை, 'உமாவை வெளியே வா' என்று சத்தம் போட்டு அழைத்தார். அதற்கு ஆசிரியர் உமாவோ, ''நீ கூப்பிட்ட உடனே வர நான் ஒண்ணும் உன் பொண்டாட்டி இல்ல,'' என்று சொல்லியுள்ளார். இந்த சம்பவத்தை, பள்ளியில் பயிலும் மாணவர்களும் அந்தப் பகுதி மக்களும் திரண்டு வந்து பார்த்ததால் சம்பவ இடமே பரபரப்பாகக் காணப்பட்டது.

இதையடுத்து அன்று மாலை ஆசிரியர் உமா, இரும்பாலை காவல்நிலையத்தில் தம்பிதுரை மீது புகாரளித்தார். அவர் தன்னை கையைப் பிடித்து தாக்கியதாகவும், சாதி பெயரைச் சொல்லியும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். அதன்பேரில், காவல்துறையினர் தம்பிதுரை மீது சாதி வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். புகார் அளிக்க ஆசிரியர் உமா தரப்பில் சக ஆசிரியர் சந்தோஷ்குமார் மற்றும் லகுவம்பட்டி கிராம மக்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் இரும்பாலை காவல்நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

தம்பிதுரை
இதற்கிடையே, காயம் அடைந்த தம்பிதுரை, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரும், ஆசிரியர் உமா தன்னை தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக புகார் அளித்திருந்தார். இதன்பேரில் உமா மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தம்பிதுரையை ஜன. 5ம் தேதி மாலையில் இரும்பாலை காவல் ஆய்வாளர் சாரதா மற்றும் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

லகுவம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கடந்த இரண்டு ஆண்டாகவே அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. அங்குள்ள ஆசிரியர்கள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு மொட்டை பெட்டிஷன்கள் அனுப்புவது தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக லகுவம்பட்டி கிராம பொதுமக்களிடம் விசாரித்தோம்.

''பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினராக திமுக பிரமுகர் தம்பிதுரையை, வீரபாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர்தான் பரிந்துரை செய்தார். அவர் தினமும் பள்ளிக்கு வருவதும், தேவை இல்லாமல் பள்ளி நிர்வாகத்தில் தலையிடுவதும் தொடர்ந்து வருகிறது. மேலும், இந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் சந்தோஷ்குமாரும் தம்பிதுரையும் மிக நெருக்கமான நண்பர்கள்தான்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு காலை உணவுத் திட்டத்திற்கான உணவுப் பொருட்களை வைப்பதற்கு பள்ளியில் ஒரு அறையை ஒதுக்கித் தரும்படி தம்பிதுரை கேட்டார். அதற்கு சந்தோஷ்குமாரும் உமாவும் மறுத்துவிட்டனர். அதிலிருந்து அவர்களுக்கும் தம்பிதுரைக்கும் உரசல் ஆரம்பித்துவிட்டது. இதுதான் ஜன. 2ம் தேதி சம்பவத்திற்கான காரணம்'' என்கிறார்கள் பொதுமக்கள்.

அதேநேரம், இந்தப் பள்ளி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருப்பதன் பின்னணி குறித்தும் சிலரிடம் விசாரித்தோம். ''லகுவம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, 1 முதல் 5ம் வகுப்பு வரை ஓரிடத்திலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை வேறு ஓரிடத்திலும் தனித்தனி கட்டடங்களாக இயங்கி வருகிறது. 1 முதல் 5ம் வகுப்பு உள்ள கட்டடத்தில் ஆசிரியர்கள் சந்தோஷ்குமாரும் உமாவும் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இடைநிலை ஆசிரியரான சந்தோஷ்குமார், நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களிடம், இந்தப் பள்ளியின் வளர்ச்சி தொடர்பான எந்த நடவடிக்கையாக இருந்தாலும் என்னைக் கேட்காமல் செய்யக்கூடாது என அதிகாரம் செய்து வருகிறார்.

உள்ளூர் மக்களிடம் நன்கொடை திரட்டி பள்ளிக்கு பெயிண்ட் அடித்தல், கட்டடங்களைக் கட்டுதல் போன்ற பணிகளை சந்தோஷ்குமார்தான் முன்னின்று செய்தார். அதற்காக மக்கள் மத்தியில் அவருக்கு ஓரளவு நல்ல பெயரும் உள்ளது. தன் மீது சக ஆசிரியர் யாராவது புகார் சொன்னால், வீடு வீடாகச் சென்று அந்த ஆசிரியர் மீது இல்லாததும் பொல்லாததும் சொல்லி தவறான பிம்பத்தை ஏற்படுத்தி வந்துள்ளார். மக்களிடம் நல்ல பெயர் உள்ளது என்பதற்காக தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரை அதிகாரம் செய்வதை யாரும் ரசிக்கவில்லை.

இவருடைய குடைச்சல் தாங்காமல் சில ஆசிரியர்கள் இந்தப் பள்ளிக்கு வந்த வேகத்திலேயே டிரான்ஸ்பரில் ஓட்டம் பிடித்துள்ளனர். நாகராஜன் என்ற ஆசிரியரிடமும் இவர் அடிக்கடி தனது ஆதிக்க மனப்பான்மையைக் காட்டியதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது ஊரே அறியும். பின்னர் நாகராஜனும் வேறிடத்திற்கு மாறுதலில் சென்றுவிட்டார். பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் பலமுறை நேரில் வந்து விசாரணை நடத்திய பிறகும் கூட சர்ச்சை மட்டும் ஓய்ந்தபாடில்லை'' என்கிறார்கள் பள்ளியின் விவரம் அறிந்தவர்கள்.

இது ஒருபுறம் இருக்க, திமுக பிரமுகர் தம்பிதுரை மீது புகாரளித்த ஆசிரியர் உமா, சக ஆசிரியர் சந்தோஷ்குமார் ஆகிய இருவருமே புகார் கொடுத்த பிறகு தலைமறைவாகி விட்டனர். தம்பிதுரையை கைது செய்த பிறகும், புகார்தாரர் குறித்த சாதி சான்றிதழ் நகலுக்காக காவல்துறையினர் பல மணி நேரம் காத்திருந்தனர். பின்னர் ஜன. 5ம் தேதி மாலை 4.30 மணியளவில் சாதி சான்றிதழ் நகல் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பிறகே, தம்பிதுரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உமா தரப்பில், அரசு வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையிடம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அவர் மீது சாதாரண பிரிவில்தான் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், எங்கே கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெற நாமும் ஆசிரியர் உமாவின் அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT