ADVERTISEMENT

முறையற்ற தொடர்பை கைவிட மறுத்த மனைவியை கல்லால் தாக்கி கொன்ற கூலித்தொழிலாளி

11:56 AM Jun 11, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேந்தமங்கலம் அருகே, முறையற்ற தொடர்பை கைவிடும்படி பலமுறை எச்சரித்தும், மறுப்பு தெரிவித்த மனைவியை கூலித்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி தேவேந்திர தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (61). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், மகளும் இருந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து விட்டார். இதையடுத்து சின்னப்பொண்ணு (44) என்பவரை மாரியப்பன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.

இந்தநிலையில் சின்னப்பொண்ணுவுக்கும், உள்ளூரைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு, முறையற்ற தொடர்பாக மாறியது. மாரியப்பன் கூலி வேலைக்குச் சென்ற பிறகு, சின்னப்பொண்ணுவும், அவருடைய ரகசிய காதலனும் தனியாக சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இதையறிந்த மாரியப்பன் மனைவியையும், அவருடைய காதலனையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களின் சந்திப்பு தொடர்ந்து வந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

ஜூன் 8ம் தேதி இரவு, சின்னப்பொண்ணு தன்னுடைய ரகசிய காதலனின் வீட்டிற்குச் சென்றுவிட்டு நீண்ட நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இதைத் தெரிந்து கொண்ட மாரியப்பன் அவரை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மாரியப்பன் ஆத்திரத்தில் சின்னப்பொண்ணுவை சரமாரியாக தாக்கினார். நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்த பிறகும் ஆத்திரம் குறையாத மாரியப்பன், வீட்டிற்கு வெளியே இருந்த கல்லை எடுத்து வந்து மனைவியின் தலையில் போட்டுள்ளார். அதே கல்லை எடுத்து மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார். இதில் சின்னப்பொண்ணு நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதையடுத்து மாரியப்பன் பேளுக்குறிச்சி காவல்நிலையத்திற்குச் சென்று, தான் மனைவியை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு சரணடைந்தார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் மற்றும் காவலர்கள் நிகழ்விடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இயைடுத்து மாரியப்பனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT