ADVERTISEMENT

ராஜகோபாலன் மீதான குண்டாஸ் ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு

01:10 PM Jan 22, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர், அங்கு பயின்ற மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின்போது, பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்து, அது தொடர்பான புகைப்படமும் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் புகாரின் அடிப்படையில், அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். இதனையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து அவர் மீது புகார்கள் குவிந்த நிலையில், ராஜகோபாலன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆட்கொணர்வு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று ஆசிரியர் ராஜகோபாலன் மனைவி உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவையும் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது கணவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளதாகவும், எனவே கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ் அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 08ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், ராஜகோபாலனின் மனைவி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, ராஜகோபாலன் மீதான குண்டாஸை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், அந்த உத்தரவில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான காரணங்களைக் குறித்த காலத்தில் வழங்கவில்லை. சம்பவம் நடந்தபோது ஆன்லைன் வகுப்பு இல்லை என்பதைக் கருத்தில் கொள்ளாமல் குண்டாஸ் போடப்பட்டுள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT