krishnagiri district, former mla chennai high court order

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை இருந்தவர் தளி ராமச்சந்திரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரான இவர் மீது, கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலையில் உள்ளன.

Advertisment

இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் ரெட்டி என்பவர்,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், ‘தளி ராமச்சந்திரன், என்னைக் கொலை முயற்சி செய்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எனக்குகொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த மிரட்டல் கடிதத்தில், தொடர்ந்து வழக்கை நடத்தினால் கொலை செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், வழக்கு விசாரணையை சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார். மேலும், வழக்கை சேலம் மாவட்டத்திற்கு மாற்றுவது குறித்து தளி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.