ADVERTISEMENT

போராட்டத்தை அறிவித்த மக்கள்; கூடங்குளம் அணுமின் நிலையம் எடுத்த அதிரடி முடிவு

06:11 PM Mar 02, 2024 | mathi23

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அணுமின் நிலையம் அமைவதற்காக அப்பகுதி மக்கள் ஏராளமானோர் தங்களது நிலங்களைக் கொடுத்துள்ளனர். அதனால், கடந்த 1999 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, நிலம் வழங்கியவர்களுக்கு அணுமின் நிலையத்தில் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், அணுமின் நிலையம் அமைவதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் 7,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்வு நாளை (03-03-24) நடைபெறவிருந்தது.

ADVERTISEMENT

கடந்த 1999 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தைப் புறக்கணிக்கும் வகையில் தேர்வு நடத்தப்படுவதாகவும், அந்த தேர்வை அணுமின் நிலைய நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் எனக் கூடங்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி அணுமின் நிலைய வளாக இயக்குநர் மற்றும் இந்திய அணுசக்தி துறைக்கு, ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவும் சபாநாயகருமான அப்பாவு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த எழுத்துத் தேர்வு நாளை நடக்க உள்ளதாக அணுமின் நிலையம் உறுதியாக அறிவித்தது.

இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறும் என அப்பகுதி மக்கள் அறிவித்தனர். மக்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT