Skip to main content

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து: நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
rrrr

 

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் நிலவி வரும் கொரோனா நோய்ப்பரவல் அச்சம் காரணமாக ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின்படியான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும்.

 

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இன்னும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படவில்லை. மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகளில்  மார்ச் மாதத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கப்பட்டாலும் கூட, மார்ச் 19 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டப் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலங்களிலும், மாநகரப்பகுதிகளிலும் கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை  சீரடையும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் தெரியாததாலும், தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாலும் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின்படியான பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் தரப்பிலிருந்து எழுந்ததை அடுத்து இந்த முடிவை சி.பி.எஸ்.இ வாரியம் எடுத்திருப்பதாக தெரிகிறது.

 

ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ, அந்த காரணங்கள் அனைத்தும் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும்   இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளை ரத்து செய்வதற்கும் பொருந்தும். ஜூலை மாதம் 15-ஆம் தேதி வரை சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகளை நடத்த முடியாது எனும் போது, அடுத்த 10 நாட்களில்  நீட் தேர்வை மட்டும் எப்படி நடத்த முடியும்? இடைப்பட்ட காலத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எந்த அதிசயமும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. மாணவர்களின் அச்சமும், மன உளைச்சலும் விலக வாய்ப்பில்லை. ஆகவே நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வாகும்.

 

நீட் தேர்வு மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வது சாத்தியமற்றது; வேண்டுமானால் நிலைமை சீரடையும் வரை இத்தகைய தேர்வுகளை ஒத்திவைத்து, கொரோனா அச்சம் விலகிய பிறகு நடத்திக் கொள்ளலாம் என்று ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் உச்சத்தை அடையும் என்று மதிப்பீடு  செய்யப்பட்டிருக்கிறது. அதன்பின் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து இயல்பு நிலைமை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதற்குள் நடப்புக் கல்வியாண்டு முடிவுக்கு வந்து விடும். அதன்பின் அடுத்த ஆண்டுக்கான தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் போன்ற பணிகள் வந்து விடும். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஓராண்டுக்கு ஒத்திவைப்பது எந்த வகையிலும் சரியானதாக இருக்காது.

 

அதுமட்டுமின்றி நீட் தேர்வுகளையும், ஐஐடி தேர்வுகளையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஐஐடி மாணவர் சேர்க்கை தேசிய அளவிலான தரவரிசையின் அடிப்படையில், மத்திய அரசால் மேற்கொள்ளப் படுவதாகும். பல்வேறு மாநிலப்பாடத்திட்டங்களிலும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சமன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆனால், அந்த சிக்கல்கள் எதுவும்  மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இல்லை. அகில இந்திய ஒதுக்கீடு தவிர்த்த பிற இடங்களுக்கான, மருத்துவ மாணவர் சேர்க்கை மாநில அளவில் தான் நடைபெறும் என்பதால், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அதை எளிதாக நடத்த முடியும். அதுதான் இன்றைய சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமையும்.

 

இதற்கெல்லாம் மேலாக, மாணவர்களின் தகுதியையும், திறமையையும் நீட் தேர்வு துல்லியமாக எடை போடுகிறது என்பது கடந்த 4 ஆண்டுகளில் நிரூபிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி,  நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவக் கல்வி வணிகமயமாவதும் தடுக்கப்படவில்லை; தகுதியும், திறமையும் கொண்டவர்கள் பணம் இல்லாததால் மருத்துவக் கல்வியில் இடம் வழங்காமல் புறக்கணிக்கப்படும் அவலமும் மாறவில்லை. இந்த அவலங்களுடன் ஒப்பிடும் போது, 12-ஆம் வகுப்பு  மதிப்பெண்களின்படி மாணவர் சேர்க்கையை நடத்துவது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் குறைத்து விடாது.

 

எனவே நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 12-ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.