ADVERTISEMENT

கொ.ம.தே.க. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது; கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்

09:51 AM Aug 29, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள பாதரையைச் சேர்ந்தவர் கவுதம் (31). இவர், சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அத்துடன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணித் தலைவராகவும் இருந்தார்.

ஆக. 22ம் தேதி, மர்ம கும்பல் அவரை காரில் கடத்திச்சென்றது. மூன்று நாள்கள் கழித்து, சங்ககிரி அருகே மேட்டுக்காடு ஏரிக்கரை முள்புதரில் கவுதம் சடலமாக மீட்கப்பட்டார். பள்ளிபாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆரம்பத்தில் அரசியல் கொலையாக இருக்குமோ என்று சந்தேகம் நிலவியது. தீவிர விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

கவுதமை கொலை செய்ததாக, அவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த குணசேகரன், பிரகாஷ், தீபன் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் முதல்கட்டமாக கைது செய்தனர். இவர்களில், தீபன் 15 லட்சம் ரூபாயை கையாடல் செய்திருந்தார். அதைக் கண்டுபிடித்துவிட்ட கவுதம், அவரிடம் பணத்தை திருப்பி ஒப்படைக்கும்படி கேட்டதோடு, அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல்தான், கொலை வரை சென்றுள்ளது. தீபன் கூட்டாளிகளை உதவிக்குச் சேர்த்துக்கொண்டு கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். அந்தக் கும்பல் கவுதமை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.


இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கூலிப்படையாக செயல்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அரவிந்த் (24), முகேஷ் (30), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தமிழரசன் (38) ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT