ADVERTISEMENT

யானை வாங்கியாச்சு; அங்குசம் வாங்க காசில்லையாம்! ஆசிரியர்கள் கிண்டல்!!

08:00 AM Jun 20, 2019 | kalaimohan

மழலையர் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைவருக்குமான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை (சமக்ர சிக்ஷா) மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. ஆண்டு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் போது, பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு அடுத்து மூன்றாவது துறையாக பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனாலும், மிகச்சொற்ப செலவு பிடிக்கும் சில இனங்களில், அரசுகள் ரொம்பவே கறார் காட்டி வருவதாக ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி கிளம்பியுள்ளன.

ADVERTISEMENT


ADVERTISEMENT

அரசுப்பள்ளிகளில் முதல் வகுப்பு குழந்தைகளுக்கு ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில எழுத்துகளின் ஒலிப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்க, ஜாலி ஃபோனிக்ஸ் இன்டர்நேரஷனல் என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அமைப்பு மாவட்டந்தோறும் ஆசிரியர்களுக்கு ஆங்கில எழுத்து ஒலிப்பு முறைகள் குறித்து பயிற்சி அளித்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் இப்பயிற்சி முகாம் புதன்கிழமை (ஜூன் 19) தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் (வியாழன்) பயிற்சி முகாம் நடக்கிறது. ஏ முதல் இஸட் வரை ஒவ்வொரு எழுத்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. இவை மட்டுமின்றி, இஇ சேர்ந்து வரும் இடங்களிலும், ஐஇ எழுத்துகள் சேரும்போதும், ஓஓ, ஓஐ, கியூயு, ஓயு உள்ளிட்ட எழுத்துகள் அடுத்தடுத்து வரும் சொற்களையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என நுட்பமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற பயிற்சி முகாம் ஆசிரியர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், மதிய உணவு, தேநீர் போன்றவற்றை அவரவர்களே சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை அவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பயிற்சி முகாமிற்கு வரும் முதல் வகுப்பு ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஆங்கில பாடப்புத்தகம், குறிப்பேடு, தேர்வு எழுதுவதற்கான மூன்று ஏ4 தாள்கள் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று முன்பே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மதிய உணவு மற்றும் தேநீர் ஆகியவற்றுக்கு அவரவர் சொந்தமாக செலவு செய்து கொள்ள வேண்டும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் ரொம்பவே கறாராக அறிவுறுத்தி இருந்தனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய சில ஆசிரியர்கள், ''முன்பெல்லாம் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டால், மதிய உணவும், இரண்டு வேளைக்கான தேநீர், பிஸ்கட்டுகளை பயிற்சி முகாம் ஏற்பாட்டாளர்களே வழங்கி விடுவார்கள். சில்லரை செலவின பட்டியலில் அதற்கான செலவுத்தொகை ஒதுக்கப்படும். மதிய உணவு வழங்காமல் போனாலும், இரண்டு வேளை தேநீர், பிஸ்கட்டுமாவது ஏற்பாடு செய்திருப்பார்கள்.

ஆனால் பயிற்சி முகாமிற்கு வரும் ஆசிரியர்களே தேநீர், மதிய உணவுக்கான செலவுகளை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன்பு, பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் வழங்கப்பட்ட பயிற்சியின்போதுகூட இப்படியான விதிகள் கிடையாது. பள்ளிக்கல்வித்துறை செய்யாவிட்டாலும்கூட, ஜாலி ஃபோனிக்ஸ் நிறுவனமாவது அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அவர்களும் செய்யவில்லை.

பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் ஒரு துறையில், இதையெல்லாம் பெரிய செலவாக கருதுவது ஆச்சர்யமாக இருக்கிறது. அதேநேரம், இப்போதுள்ள அரசு ஆசிரியர்களின் நலன்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அந்த வகையில்தான் தேநீர், மதிய உணவு ஏற்பாடு செய்யாதது குறித்தும் அணுக வேண்டியதாக இருக்கிறது,'' என்றனர்.

பள்ளிக்கல்வித்துறையின் இத்தகைய அணுகுமுறையை, 'யானை வாங்கியாச்சு; அங்குசம் வாங்கத்தான் காசில்லை கதையாக இருக்கிறது' என்று விமர்சிக்கிறார்கள் ஆசிரியர்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT