ADVERTISEMENT

தனது எழுத்து படைப்புகள் அனைத்தையும் வாசகர் ஒருவருக்கு எழுதி  கொடுத்த கி.ரா..! 

04:02 PM May 18, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம். பின்னாட்களில் இதைச் சுருக்கி, கி.ராஜநாராயணன் என்று வைத்துக் கொண்டார். அது பின்னர் கி.ரா என ஆனது. கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எனப் போற்றப்படும் கி.ரா 1958 -ஆம் ஆண்டு முதல் கடைசிக் காலம் வரை எழுதிக்கொண்டே இருந்தவர்.

ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற கி.ரா பிறகு, விவசாயம் பார்த்து வந்தார். 35 வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினார். அவரின் 'மாயமான்’என்ற முதல் சிறுகதை 1958-ல் 'சரஸ்வதி' இதழில் வெளியாகி வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார்.

கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார்.

வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளைத் தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாகக் கொண்டிருந்தார். வட்டார வாய்மொழி மரபு, செவ்விலக்கியக் கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து, தனக்கென தனி நடையை உருவாக்கிக் கொண்டவர்.

பிரபல இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. 2007-ல் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட 'நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக வெளியானது. 2009-ல் மட்டும் இவரது 30 புத்தகங்கள் வெளி வந்தன. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல்கள், 6 கட்டுரைத் தொகுதிகள், 3 நாவல்கள் எழுதியுள்ளார்.

'இவரது நூல்களில் 'கோமதி', 'கண்ணீர், 'கரிசல் கதைகள், 'கி.ரா.பக்கங்கள்', 'கிராமியக் கதைகள்', 'கொத்தை பருத்தி, 'புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள், 'கோபல்ல கிராமம்' 'புதுமைப் பித்தன், 'மாமலை ஜீவா' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 'கிடை’ என்ற இவரது குறுநாவல் 'ஒருத்தி' என்ற திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. "ஒரே மூச்சில் ஒரு கதையை எழுதி முடிக்கும் வழக்கம் எனக்கு கிடையாது. எழுதியதைப் படித்து, மீண்டும் மீண்டும் அடித்துத் திருத்தி எழுதும் பழக்கம் உள்ளவன்’என்று குறிப்பிட்டுள்ளார் கி.ரா.

படிக்காத இவர் படைத்த செறிவான படைப்புகளை வைத்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சாகித்திய அகாதமி விருதைப் பெற்ற கி.ராவின் இலக்கிய பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அவருக்கு வீடு அளித்தது புதுச்சேரி அரசு. அவரது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபு என்கிற பிரபாகரன்.

கடைசி காலத்தில் கி.ரா.வை எழுத்தாளரான இளைய மகன் பிரபு மற்றும் ஒளிப்பட கலைஞர் இளவேனில் ஆகியோர் இவரை கவனித்து வந்துள்ளனர். கரோனா காலத்திலும் அவர் கைப்பிரதியாக பெண்களைப் பற்றிய "அண்டரெண்டப்பட்சி" எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். இதை அச்சில் ஏற்றாமல் கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என கி.ரா. விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், ஜாதி குறித்த "சாவஞ்செத்த சாதிகள்" என்று கதையினையும் எழுதியுள்ளார். தான் எழுதாமல் விட்ட கதைகளைத் தொகுப்பாகக் கொண்டு "மிச்ச கதைகள்" என்ற புத்தகத்தைத் தயாரித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி சுயநினைவுடன் எழுதிக் கொள்வதாகக் கூறி ஒரு எழுத்து படிவத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனது படைப்புகள் அனைத்தும் புதுவை இளவேனில், அவரது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபு என்கிற பிரபாகரன் ஆகியோருக்கும் சேரும் என அவர் கைப்பட எழுதியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ பதிவினை ஒன்றிணையும் கி.ராஜநாராயணன் வெளியிட்டுள்ளார். இன்று முதல் தனது படைப்புகள் அனைத்தும் இந்த மூவரையும் சாரும் என வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது படைப்புகளை வெளியிடும் பதிப்பாளர்களும் திரைப்படமாக வெளியிடுபவர்களும் அதன் ராயல்டியை இந்த மூவருக்கும் கொடுக்க வேண்டும் எனக் கையொப்பமிட்டுள்ளார். இந்த மூவரும் தனது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை "கரிசல் அறக்கட்டளை" எனத் துவங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்பும், கூடிய விருதினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாகத் தனது எழுத்துப் படைப்புகள் அனைத்தையும் வாசகர் ஒருவருக்கு எழுத்தாளர் எழுதிக் கொடுத்து இருப்பது இதுவே முதல் முறை.

99 வயதாகும் கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அவரது இல்லத்தில் நே‌ற்று இரவு 11 மணிக்குக் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்ற நிலையிலே அவர் இறந்துள்ளார். லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட அவரது உடல் மதியம் கோவில்பட்டியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்ட உள்ளது.

புதுச்சேரி அரசு சார்பில் போலீஸ் மரியாதையுடன் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் அவரது உடலுக்கு அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், செய்தித்துறை இயக்குனர் வினயராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் கி.ராஜநாராயணன் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் எழுத்தாளர் கி.ரா. உடல் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரியிலிருந்து கோவில்பட்டி இடைச்செவல் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இரவு 8 மணியளவில் அவரது உடல் அங்கு செல்லும் எனத் தெரிகிறது.

இதனிடையே துணை நிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "நாட்டுப்புற இலக்கியத்தை முதன்மைப்படுத்தியதில் கி.ராவுக்கு தனி இடம் உண்டு. தமிழ் கதை இலக்கியத்தில் புதிய திசைவழியை உருவாக்கிக் கொடுத்த கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா. லாஸ்பேட்டையில் உள்ள கி.ரா.வின் இல்லம் நினைவு நூலகமாக மாற்றுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT