ADVERTISEMENT

மாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரில் தகனம்! 

12:39 AM Nov 16, 2019 | santhoshb@nakk…

கேரளா போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல், வியாழக்கிழமை நள்ளிரவு (நவ. 14) சொந்த ஊரில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம் (55). மாவோயிஸ்ட் போராளியான இவர், கேரளா மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பதுங்கி இருந்து மாவோயிஸ்ட் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து வந்தார்.

ADVERTISEMENT


இந்நிலையில் கடந்த அக். 29ம் தேதி, அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி வனப்பகுதியில் அவரை சுற்றி வளைத்த கேரளாவின் தண்டர்போல்ட் சிறப்பு காவல்துறை படையினர், அவரை சுட்டுக்கொன்றனர். இதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். அதற்கு முதல் நாளில் அஜிதா, கார்த்திக், சுரேஷ் ஆகிய மாவோயிஸ்ட் போராளிகளையும் தண்டர்போல்ட் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.


ஆரம்பத்தில் மணிவாசகத்தின் உடலை, சொந்த குடும்பத்தினருக்கே கூட காட்டாமல் கேரள காவல்துறை அலைக்கழித்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலத்தில் வசிக்கும் மணிவாசகத்தின் தங்கை லட்சுமிக்கு, அவருடைய உடலை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து சடலம், கூறாய்வு செய்யப்பட்டது. மணிவாசகத்தின் சடலத்தை சொந்த ஊரில், நவ. 14ம் தேதி நள்ளிரவுக்குள் அடக்கம் செய்யவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

இறுதிச்சடங்கில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் போராளிகளான அவருடைய தங்கை சந்திரா, மனைவி கலா ஆகியோரும் கலந்து கொள்ளவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி அளித்தது. இவர்கள் இருவருக்கும் நவ. 14ம் தேதி காலை 11.30 மணியளவில் பரோலில் விடுவிக்க அனுமதி கிடைத்தது. அதையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


ஆனால் ஏனோ அவர்கள் இருவரையும் திருச்சியில் இருந்து காவல்துறையினர் சேலத்திற்குக் கொண்டு வர இரவு 11.45 மணி வரை காலம் கடத்தியிருந்தனர். அதேபோல், சேலம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள மணிவாசகத்தின் உடலும் அன்று இரவு 9.20 மணிக்குதான் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சேலத்தில் இருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சொந்த ஊரான ராமமூர்த்தி நகர் சுடுகாட்டுக்கு நேரடியாக நள்ளிரவு 11.45 மணியளவில்தான் கொண்டு சென்றுள்ளனர்.


மணிவாசகத்தின் உடலுக்கு செவ்வணக்க அஞ்சலி செலுத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மாவோவிய போராளிகள் ராமமூர்த்தி நகரில் குவிந்து இருந்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, நள்ளிரவுக்குள் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்பதால் காவல்துறையினர் எல்லோரையும் அவசரப்படுத்தினர். இதனால் சடலத்திற்கு கலாச்சார வழக்கப்படி செய்ய வேண்டிய இறுதிக்காரியங்கள் செய்யவும் அனுமதிக்கவில்லை. மாவோயிஸ்ட் போராளிகள் பலரையும் சடலத்தை நெருங்கவும் விடாமல் போலீசார் தடுத்தனர்.


மணிவாசகத்தின் மனைவி கலா, தங்கை சந்திரா ஆகியோர் உடலை தொட்டு, கதறி அழுதனர். அப்போது சந்திரா, மாவோவிய போராளிகள் இறந்தால், பாடக்கூடிய 'தியாகிகளே தியாகிகளே' என்ற இரங்கல் பாடலையும் பாடினார்.


முன்னதாக நடந்த இரங்கல் கூட்டத்தில் மாவோ போராளிகள், மணிவாசகம் உள்ளிட்ட நான்கு தோழர்களை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டுமிட்டு கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளது என்றும், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கண்டனம் தெரிவித்தும் பேசினர்.


நள்ளிரவைக் கடந்து 12.30 மணியளவில் மணிவாசகத்தின் உடலுக்கு, அவருடைய அண்ணன் சுப்ரமணியத்தின் மகன் அன்பரசு தீமூட்டினர். கியூ பிரிவு போலீசார் உள்பட அனைத்து உளவுத்துறை போலீசாரும், இறுதிச்சடங்கு நிகழ்வுகளையும், அங்கு வந்திருந்த மாவோ போராளிகள், ஊடகத்தினர் என ஒருவர் விடாமல் அனைவரையும் வீடியோ கேமராவில் பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த ஊரில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT