ADVERTISEMENT

சாக்கு போக்குச் சொன்ன மாமனார்... மரக்கட்டையால் தாக்கிய மருமகள்!

09:00 AM Jul 09, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது காவேரி பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது தங்கசாமி. இவருக்கு 3 மகன்கள். மூவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இதில் மூத்த மகன் ராமலிங்கம் கடந்த 2010ஆம் ஆண்டு நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். அதன் பிறகு பெரியவர் தங்கசாமி தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை வாய்மொழியாக மூன்று மகன்களுக்கும் பாகம் பிரித்துக் கொடுத்துள்ளார். அதில் மூத்த மகன் ராமலிங்கம் இறந்துவிட்டதால் அவரது மனைவி ராணி அந்தப் பாகத்துக்கு உரிமையாளரானார்.

தங்கசாமி சொத்தை வாய்மொழியாக பிரித்துக் கொடுத்திருந்தாலும் கூட அதை முறைப்படி பத்திரப்பதிவு செய்து பட்டா மாற்றம் செய்து தருமாறு மூத்த மருமகள் ராணி மாமனார் தங்கசாமி இடம் அவ்வப்போது கேட்டு வந்துள்ளார். அதற்கு தங்கசாமி சாக்கு போக்குச் சொல்லி வந்துள்ளார். இதனால் மாமனார் மருமகள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. தங்கசாமி அவ்வப்போது மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மதுபோதையில் தங்கசாமி வீட்டில் படுத்திருந்தபோது மருமகள் ராணி நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ராணி அங்கிருந்த மரக்கட்டையால் தங்கசாமியைத் தாக்கியுள்ளார். தங்கசாமி நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டார். அவரை இளைய மகன் செல்வராஜ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ரங்கசாமி இளைய மகன் செல்வராஜ் செந்துறை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து செந்துறை போலீஸார் தங்கசாமி சாவுக்கு காரணமான மூத்த மருமகள் ராணியைக் கைது செய்துள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். சொத்துக்காக மாமனாரை அடித்துக் கொன்ற மருமகளைப் பற்றி அப்பகுதி மக்கள் பரபரப்பாகப் பேசிக் கொள்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT