ADVERTISEMENT

ஆட்சியின் அலங்கோலங்களை மறைக்க காஷ்மீர் மக்களைப் பலிகடாவாக்கியிருக்கிறார்கள் - திருமாவளவன் 

07:58 AM Aug 06, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

ADVERTISEMENT

’’காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 370 ஐ ரத்து செய்தும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் இன்று அவசர அவசரமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது அப்பட்டமான சர்வாதிகாரப் போக்காகும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த யுத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக எதிர்க்கிறோம். இந்தியாவை அமைதியற்ற பகுதியாக ஆக்குகிற பாஜக அரசின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்க ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்.

கடந்த சில நாட்களாக காஷ்மீரில் துருப்புகள் குவிக்கப்பட்டன. காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு அனைத்து விதமான தொடர்பு சாதனங்களும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. காஷ்மீர் மாநிலத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தம் இந்திய அரசால் தொடுக்கப்பட்டிருக்கிறது .இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள ஆணை இதுவரை காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. அதுமட்டுமின்றி அவசர அவசரமாக இன்று மாநிலங்களவையில் சட்ட மசோதா ஒன்றை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்திருக்கிறார். காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.

அரசியலமைப்புச்சட்ட உறுப்பு 370 இன் கீழ் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டது சலுகை அல்ல. அது காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்போது ஏற்கப்பட்ட நிபந்தனை. அதை ரத்துசெய்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.

மோடி அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்திருக்கிறது. அமைதியை சீர்குலைப்பதன்மூலம் ஆட்சியின் அலங்கோலங்கள் வெளியில் தெரியாமல் மறைக்கலாம் என மோடி அரசு நினைக்கிறது. அதற்காக காஷ்மீர் மக்களைப் பலிகடாவாக்கியிருக்கிறது. இதைக் கடுமையாக எதிர்க்கவேண்டும் என அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறோம். ’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT