Skip to main content

 இந்தி பேசுவோருக்குப் பிராந்திய மொழியைக் கற்றுத்தர வேண்டும் - திருமா

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை :  ’’தென்னக இரயில்வே துறையின் சார்பில் இரயில் நிலைய அதிகாரிகளுக்கிடையிலான தகவல் தொடர்புகள் குறித்து 12.06.2019 அன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையானது மொழியுரிமை உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இரயில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் கட்டுப்பாட்டாளர்கள், நிலைய கண்காணிப்பாளர்கள், மற்றும் நிலைய அலுவலர்கள் ஆகியோர் தங்களுக்கிடையே  பணிகுறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்போது, இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர பிராந்திய மொழிகளில் உரையாடல் செய்யக்கூடாதென ஆணையிடும் அறிக்கைதான் தென்னக இரயில்வேயின் அந்த சுற்றறிக்கையாகும். அதாவது, தமிழில் பேசக் கூடாது என்பதுதான் அதன் நோக்கமாகும். 

 

t

 

இந்தி மட்டுமே பேசத் தெரிந்த சில அதிகாரிகளுக்காகத் தமிழ்ப் பேசும் பெரும்பான்மையினரை இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி எழுத்துபூர்வமான சுற்றறிக்கையாகவே வெளியிட்டு தென்னக இரயில்வே நிர்வாகம் வற்புறுத்தியது. தமிழ் தெரியாதவர்களிடம் தமிழில் பேசினால் அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படும்நிலை ஏற்படலாமென்றும் அதனால் விபத்துகள் நேரும் வாய்ப்புகள் உருவாகுமென்றும் நிர்வாகம் அச்சப்படுவதில் தவறில்லை. ஆனால், அதற்காகத் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை மெல்ல மெல்ல அப்புறப்படுத்தும் ஆபத்தை வரவேற்க இயலுமா? காலப்போக்கில் இரயில்வே துறையில் இந்தி அல்லது ஆங்கிலம் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்கிற நிலை உருவானால், தமிழர்களும் இந்தி கற்றாகவேண்டும் என்கிற கட்டாயம் உருவாகும். எனவே, இத்தகைய சுற்றறிக்கையை நிர்வாகம் தொடர்பானது  என்று மட்டுமே இலகுவாக எடுத்துக்கொள்ள இயலாது. ஒரே மொழியை பேசுவோரிடையிலும் புரிந்துகொள்ளுவதில் குழப்பம் ஏற்படுவதுண்டு.  தகவல் பரிமாற்றம் என்பது ஒருவகை தனித்திறன். இது மொழியோடு மட்டுமே தொடரபுடையதல்ல. எனவே, இதில் நிர்வாகத்துக்கு உள்நோக்கம் இருப்பதை புரிந்துகொள்வது இன்றியமையாததாக உள்ளது. 

 

இந்நிலையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதும் நிர்வாகம் பின்வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வரவேற்கும அதே வேளையில், தென்னக இரயில்வே நிர்வாகத்தின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் இனிவருங்காகாலத்தில் இத்தகைய முயற்சிகளைக் கைவிடவேண்டும் என்பதுடன்,  பிறமொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் வேலை செய்யும்  இந்தி பேசுவோருக்குப் பிராந்திய மொழிகளைக் கற்றுத்தர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல இந்தி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் வேலை செய்யும் பிறமொழி பேசுவோர் இந்தியைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். இந்த அணுகுமுறைகளின்றி இந்தியை மட்டுமே பிறமொழி பேசுவோர் மீது திணிக்கும் முயற்சியை முற்றிலும் கைவிடவேண்டுமென தென்னக இரயில்வே நிர்வாகமும் மைய அரசும் முன்வரவேண்டுமென விடுதலைச்சிறைத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.