ADVERTISEMENT

விவசாயி போர்வையில் மோசடி; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

06:49 PM Jun 16, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்ட தென்னிலை கிராமத்தை சோ்ந்தவர் ராஜா. இவர் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் வசிக்கும் தென்னிலை கிராமத்தில் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் மத்திய அரசின் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால், தன்னுடைய நிலத்தில் கோபுரம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் பல மனுக்கள் கொடுத்துள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியர் மத்திய அரசின் திட்டம் என்பதால் அந்த மனுக்கள் மீதான தீர்வு எடுக்காமல் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விவசாயி ராஜா, மாவட்ட ஆட்சியருக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தனக்கு சொந்தமான இடத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும் என்று தொடர்ந்து மனுக்கள் கொடுத்துள்ளேன். அவர்கள் 446 அடி உயர கோபுரம் அமைக்க அனுமதி பெற்றுவிட்டு, 445 அடி உயரம் தான் கோபுரம் அமைத்துள்ளனர் என்று கேள்வி எழுப்பியபோது, கலெக்டர் பிரபு சங்கர் கோபமாகி, ராஜா நீங்கள் விவசாயி என்ற போர்வையில் தொடர்ந்து இதுபோன்ற அரசுக்கு எதிரான காரியங்கள் செய்து வருகிறீர்கள். எனவே உங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் உங்கள் மீது ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட புகார்கள் என்னிடம் உள்ளது. அந்த ஆதாரங்களே போதுமானது உங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய. அந்த பணிகள் அனைத்தும் மத்திய அரசு செய்து வருகிறது. என்னால் அவர்களை நிறுத்தச் சொல்லி உத்தரவிட முடியாது. அரசு பணிக்கு இடையூறாக இருக்க முடியாது. எனவே நீங்கள் அரசுக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலே போதும். ஆனால் நீங்கள் இதற்காக போராட்டம் நடத்தினால் நான் நிச்சயம் உங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வேன் என்று எச்சரித்துள்ளார். இவர்கள் இருவரும் பேசிய ஆடியோ தற்போது தமிழகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஆடியோவில் பேசியது நான்தான்” என்று கூறிய அவர், “ராஜா என்ற நபர் விவசாயி என்ற போர்வையில் இது போன்ற விஷயங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் சென்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் கொடுத்து விடுவேன் என்று கூறி பணம் கேட்டு மிரட்டி வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்த நிலையில்தான் தென்னிலை கிராமத்தில் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ராஜா சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் இது தொடர்பாக பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம் காவல்நிலையத்தில் புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த புகார் எனது கவனத்திற்கு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட ராஜாவை போனில் அழைத்து இனி இது போன்று தவறுகள் நடந்தால் உங்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் தான் எச்சரிக்கையாகக் கூறினேன். அவரை மிரட்டவில்லை” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT