karur district police against issue meet collector 

Advertisment

திருச்சி மாவட்டம் சர்க்கார்பாளையம் பனையக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு சரியான வேலை கிடைக்காததால், அப்போது தவறான நண்பர்களின் சேர்க்கையால் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இவர் பல்வேறு கொலைக்குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறைவாசமும் அனுபவித்துள்ளார். பல்வேறு வழக்குகளும் இவர் மீது தற்போது வரைநிலுவையில் உள்ளன. இதில் காவல்துறையால் புனையப்பட்ட வழக்குகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்சமீபத்தில் ஆர்த்திகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் சராசரி மனிதரைப் போல தானும் வாழ வேண்டும் என நினைத்து குற்றச்செயல்களை முற்றிலுமாக தவிர்த்து மனம் திருந்தி தற்போது வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே, தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார். அதில் சில வழக்குகளில் குற்றவாளி இல்லை என நிரூபணம் ஆகி நீதிமன்றம் விடுவித்துள்ளது. மீதமுள்ள வழக்குகளிலும் குறிப்பிட்ட நாட்களில் ஆஜராகி வருகிறார். இந்நிலையில், கடந்த வருடம் காவல்துறையினர் ஜெகதீஷ் மீது பொய்யான வழக்கு ஒன்றை புனைந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான விசாரணையில் 7 மாதத்திற்கு பிறகு குண்டர் சட்டத்தில் வழக்கு போடுவதற்கு முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் இவரை விடுவித்தது. இந்த சூழலில் மீண்டும் ஜெகதீஷை கைது செய்து வழக்குகளில் சிக்க வைக்க வேண்டும் எனவும், ஜெகதீஷின் கை, கால்களை உடைக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் திட்டமிட்டு தன்மீது பொய்யான வழக்குகளை சித்தரிக்க முயல்வதாக கூறி, அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்க கரூர் மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்திக்க அவரது தாயார் மற்றும் மனைவியுடன் வந்திருந்தார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் குற்றவாளியான ஜெகதீஷிடம் மனுவை பெறுவதற்கு தயக்கம் காட்டியதோடு மனுவை தனது உதவியாளரிடம் அளிக்கக்கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளரிடம் ஜெகதீஷ் பேசுகையில், "கடந்த காலத்தில் நான் செய்த குற்றச்செயலுக்காக இன்று வரை குற்றவாளியாக உள்ளேன். இது தொடர்பாக ஏற்பட்டுள்ள வழக்குகளில் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். நான் இப்போது திருமணம் செய்து கொண்டதால் சராசரி மனிதனாக வாழ விரும்புகிறேன். ஆயினும் காவல்துறையினர் என் மீது ஏதேனும் புகார் கூறி என்னை வழக்குகளில் சிக்க வைக்க திட்டமிடுவதோடு எனது கை, கால்களை உடைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Advertisment

ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்ட போது என் கை, கால்களை மூன்று முறை உடைத்துள்ளனர். தற்போது நான் மனிதனாக வாழ நினைக்கும் நேரத்தில் காவல்துறையினர் வேண்டுமென்றே திட்டமிட்டு தொடர்ந்து எனக்கு மன உளைச்சலை அளித்து வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட வந்தேன். நான் வசித்த பகுதி திருச்சி என்பதால், திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஆலோசனைகூறினார். திருச்சியில் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அங்கு நான் வசிப்பது சரியாக இருக்காது எனக் கருதி என் மனைவியுடன் நான் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். அங்கும் காவல்துறையினர் தொடர்ந்து என்னை கண்காணித்து தொந்தரவு செய்து வருகின்றனர். சராசரி மனிதனாக திருந்தி வாழ நினைக்கும் எனக்கு அரசும், அரசு துறை அதிகாரிகளும் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனத்தெரிவித்தார்.