ADVERTISEMENT

கரிசங்கல் குட்டை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்!- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! 

08:06 AM Mar 01, 2020 | santhoshb@nakk…

காஞ்சிபுரம் கரிசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை மூன்று மாதத்தில் அகற்றிவிட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், கரிசங்கல் கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரிசங்கல் குட்டை என்ற நீர்நிலை அமைந்துள்ளது. அந்தக் குட்டையில் 2014- ஆம் ஆண்டில் பஞ்சாயத்து தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது ஆட்கள் மணலைக் கொட்டி ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீர்நிலை மீதான இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நந்தகோபால், புருஷோத்தமன், கோபிநாத் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்தபோது, பஞ்சாயத்து தலைவருக்கும், புகார்தாரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அதுதொடர்பாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த வருவாய் ஆய்வாளர், ஆக்கிரமிப்பு எனக் கூறி அதை அகற்ற வேண்டுமென கட்டாயப்படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதில் மூவரும் கைதான நிலையில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான திருமூர்த்தி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென புகார் அளித்தவர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்படுவதாக வாதிட்டார்.

பின்னர் இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்த்ததுடன், கரிசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, ஒருங்கிணைந்த அறிக்கையை ஜூன் 3- ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT