/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/m3_11.jpg)
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் என்னும் இடத்தில்,அர்த்தநாரீஸ்வரர்கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு,நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில்,‘கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோவில் நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக, கடந்த அக்டோபர் 29- ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்,பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கருத்து கேட்பு கூட்டம் நடப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பே முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகள் தொடங்கி விட்டார். மேலும், ரூபாய் 100 கோடி மதிப்புள்ள நிலத்தை, அரசுக்கு 1 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.’ என வாதிடப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ‘கருத்துக்கேட்பு கூட்டத்தின் அடிப்படையில் கோவில் நிலத்தை அரசுக்கு சொந்தமாக வழங்குவதற்குப் பதிலாக குத்தகைக்கு நிலத்தை வழங்க தற்போது அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். பரிந்துரையின் மீது அரசின் முடிவுக்கு காத்திருக்கிறோம்’ என விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக,டிசம்பர் 9- ஆம் தேதிக்குள் பதிலளிக்க, தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர். அதுவரை, ஆட்சியர் அலுவலகம் அமைப்பது தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்கும்படி இடைக்கால உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)