ADVERTISEMENT

ரியல் எஸ்டேட் கும்பலில் இருந்து உடையநேரி காலணி மக்களை பாதுகாக்க வேண்டும் : கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

08:40 PM Mar 25, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதுக்கோட்டையை அடுத்த உடையநேரி காலணி மக்களை ரியல் எஸ்டேட் கும்பலின் அச்சுருத்தலில் இருந்து பாதுகாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியம் திருமலைராய சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது உடையநேரி பகுதி. 1974-ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் நிலம் ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில் உடையநேரிப் பகுதியில் சுமார் 48 ஏக்கர் பரப்பளவில் இலங்கைத் தமிழர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது.

இலங்கையில் மலையப்பகுதியில் இருந்து வந்த தமிழர்களால் வெக்கை நிறைந்த இந்தப் பகுதியில் வசிக்க முடியவில்லை. இதனால், படிப்படியாக தமிழகத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் அவர்கள் குடியேறிவிட்டனர். பல ஆண்டுகளாக தரிசாகக் கிடந்த இந்த இடத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் இதில் குடியேறினர். இப்படி 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்படி நிலங்களை அதிகாரிகளின் துணையோடு சில ரியல் எஸ்டேட் கும்பல் மோசடியாக ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. மோசடியான பட்டாவைக் காட்டி அடியாட்களை வைத்து மேற்படி குடும்பங்களை விரட்டும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குடிசைகளை தீவைத்துக் கொளுத்துவது, வீடுகளைச் சுற்றியுள்ள வேலிகளைப் பிரித்து எரிந்து அராஜகம் புரியவது. கொலை செய்துவிடுவதாக மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றனர். கட்சியினரின் வலுவான தலையீட்டின் காரணமாகவும், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களின் காரணமாகவும் அங்குள்ள ஏழை, எளிய மக்கள் அப்புறப்படுத்துவது தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், ரியல் எஸ்டேட் கும்பலின் அச்சுருத்தல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், சனிக்கிழமையன்று புதுக்கோட்டைக்கு வருகைதந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடையநேரி பகுதிக்குச் சென்றார். பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். உடையநேரி காலணி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டுமெனவும், அவர்களுக்கு நிரந்தமாக பட்டாக் கிடைப்பதற்கு உரிய வழிமுறைகளைக் செய்ய வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், வி.ச மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT