ADVERTISEMENT

கல்வராயன் மலையில் பெருகிவரும் கள்ளச்சாராயம்!

07:55 PM Mar 17, 2020 | Anonymous (not verified)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது கல்வராயன் மலை. இங்கு சுமார் 27 ஏழு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் பிழைப்பு தேடி பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வார்கள். மலையில் உள்ள கிராமங்களுக்கு இன்னும் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை. இந்த மலையில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் மரம் வெட்டும் வேலைக்கு என்று அழைத்துச் சென்று ஆந்திராவில் செம்மர கடத்தலில் ஈடுபட வைக்கிறார்கள் கடத்தல்காரர்கள். இதனால் அந்த அப்பாவி மக்கள் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த மலையில் அதிக வெளியாட்கள் தொடர்பு இல்லாததால் பல ஆண்டுகளாகவே இம்மலையில் கள்ளச்சாராய உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. காவல்துறையினர் மலையில் சோதனை செய்து இதை தடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியும் புதிதுபுதிதாக சாராயம் காய்ச்சும் தொழில் நடந்தபடியே உள்ளன. இந்த தொழிலில் ஈடுபட்ட பல்வேறு நபர்களை காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்வது தொர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதையும் மீறி கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் அமோகமாக நடந்து வருகிறது.

கடந்த 15ஆம் தேதி மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரனுக்கு மலையில் கள்ளச்சாராய தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து எஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் அதிரடிப்படையினர் தனிப்படை எஸ்ஐ வினோத்குமார், கச்சிராபளையம் தனிப்பிரிவு எஸ் ஐ ராஜேந்திரன் ஆகியோர் ஒரு அணியாக மலைக்குச் சென்றனர். கருப்பனார் கோயில் ஆற்றின் ஓரத்தில் 20 பாரல்களில் சாராய ஊறல்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பார்லர்களில் இருந்த சாராய ஊறலை எஸ்பி ஜெயச்சந்திரன் கீழே கொட்டி அழித்தார். பின்னர் அவைகளை போலீசார் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர்.

இதேபோல் சின்னசேலம் கூகையூர் ரயில்வே கேட் அருகில் அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும் படியாக டூவீலரில் வேகமாக வந்த ஒரு நபரை வழிமறித்து சோதனை செய்தனர். அவரிடமிருந்து 55 லிட்டர் கள்ளசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாவலூர் மேட்டு தெருவைச் சேர்ந்த கணேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி சாராயம் கடத்தியதாக அவரை கைது செய்தார். கல்வராயன்மலையில்சாராய ஊறல் வைத்திருந்ததாக உதயகுமார் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் போதிலும் புதிதுபுதிதாக கள்ளச்சாராய உற்பத்தி தொடர்ந்து மலையில் நடைபெற்று வருகிறது. அங்கிருந்து சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சி அனுப்பப்படுகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் காவல்துறை கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தீவிரம் காட்டி வரும் இந்த நேரத்தில் முற்றிலும் சாராயத்தை அழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

மேலும் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு கள்ள சாராயம் காய்ச்சி விற்றதாக நாலு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே இதுபோன்ற கள்ளச்சாராயத்தை முற்றிலும் கட்டுப்படுத்த அந்தத் தொழிலை கை விட்டு சுயதொழில் செய்து பிழைக்க முன் வருபவர்களுக்கு அரசு கடனுதவி வழங்கப்படும். அந்த கடனுதவி பெற காவல்துறை பரிந்துரை செய்யும். அதனால் இனி வரும் காலத்தில் சாராய தொழிலை விட்டு திருந்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் எஸ்பி ஜெயச்சந்திரன். கல்வராயன் மலையும் கள்ளச்சாராயமும் பிரிக்க முடியாது தொழிலாக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்படுமா? தடுக்கப்படுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT