கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ளது வீரபயங்கரம் கிராமம். இந்தகிராம பகுதியில் காட்டுக்கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் மகாராஷ்டிராவில் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி பிள்ளைகளையும் பார்ப்பதோடு தனது வயலுக்கு சென்று விவசாயம் செய்வதும் உண்டு. தற்போது கரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்படி வந்த முத்துசாமியிடம் தனது நிலத்தில் பயிர் செய்துள்ள பயிர்களை மான், காட்டுப்பன்றி போன்றவை நாசம் செய்துவருவது பற்றி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதனால் அவைகளை ஓட்டுவதற்காக நேற்று அதிகாலை 3 மணி அளவில் தனது வயலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்படி சென்ற முத்துசாமி, பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வந்து சேரவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஜீவா ஆட்சி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். அவரது காட்டுக்கொட்டாய் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கருந்தாலங்குறிச்சி கிராமத்தில் ஏரிக்கரை அருகே முத்துசாமி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அவரது மனைவியும் உறவினர்களும் அங்கு சென்று பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து கீழ்குப்பம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அதில் முத்துசாமியின் நிலத்தின் பக்கத்து நிலத்தின் உரிமையாளர் சேலம் மாவட்டம் காமாக்க பாளையத்தை சேர்ந்த மணிவேல் என்பவர் இவர் விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு விலங்குகளை தடுப்பதற்காக தனது நிலத்திற்கு முத்துசாமி நிலத்திற்கும் இடையில் மின்வேலி அமைத்துள்ளார்.
அங்கு மின்வேலி இருப்பது தெரியாத முத்துசாமி அதில் சிக்கி இறந்து போயுள்ளார் என்பதை போலீசார், விசாரணை மூலம் உறுதி செய்துள்ளனர். முத்துசாமி இறப்புக்கு காரணம் மணிவேல் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வனவிலங்குகளை விரட்டி அடிப்பதற்காக வயல்வெளியில் மின்சார வேலிகள் அமைத்ததும் அந்த மின்சார வேலிகள் இருப்பது தெரியாமல் அவ்வப்போது பல விவசாயிகள் சிக்கி இறப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.