Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

 

கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருக்கிற ஊரடங்கின் காரணமாகப் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி காப்பாற்றிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
 


 

 

K. Balakrishnan


 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு கடந்த 28 நாட்களாக அமலில் இருந்து வருகிறது. அனைத்து பகுதி மக்களும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் காரணமாகத் தமிழகம் முழுவதுமுள்ள மாற்றுத்திறனாளிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை எதுவும் தமிழ்நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை.
 

தமிழக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் அறிவித்துள்ள போதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த நிவாரணத் திட்டமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் பசி, பட்டினியோடு பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 
 

மாற்றுத்திறனாளிகள் உடல்ரீதியாக பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலைமையைத் தாங்கள் அறிந்ததே. இதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திரம் வழங்கப்படும் ஓய்வூதியமும் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளை இப்பெரும் சோகத்திலிருந்து காப்பாற்றிட மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 5000 ரூபாயும், உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். 
 

 

http://onelink.to/nknapp

 

உதவிகோரும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்வதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவி எண் ஒன்று துவங்கப்பட்டிருந்தாலும், அந்த இணைப்பு முறையாகச் செயல்படுவதில்லை. அப்படியே தொடர்பு கிடைத்தாலும் உரிய பதில் ஏதும் கிடைப்பதில்லை என்று மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர். எனவே, இப்பிரச்சினையைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
 

 

இந்தத் தொகை கிடைத்தால் மட்டுமே இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மாற்றுத்திறனாகள் வாழ முடியுமென்பதோடு, இவர்களது அன்றாட மருத்துவத் தேவைகளையும் ஈடு செய்ய முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

மத்திய அரசு வழங்குவதாக அறிவித்துள்ள நிவாரண உதவிகளையும் தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்குப் பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

“கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
The Governor has been imposed on TN Minister Palanivel Thiagarajan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும். அதனால்தான் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர். பேரிடரின்போது உதவி கேட்டால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பது போல் பா.ஜ.க.வைப் பற்றி மக்கள் எண்ணுகின்றனர். கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.