Skip to main content

இந்திய வரலாற்றைத் திருத்தாதே! மனு வாதத்தை திணிக்காதே!-சி.பி.ஐ.மறியல் நிகழ்வு!

 

இன்றைய கரோனா பாதிப்பு நெருக்கடியான சூழலில் மத்தியில் ஆளும் பா.ஜ.கட்சி மக்களைப் பாதுகாக்க தவறிவிட்டு இந்திய மக்களை மேலும் நெருக்கடி நோக்கி தள்ளுகிற மக்கள் விரோத சட்டங்களை பலமான எதிர்க்கட்சிகள் அற்ற நிலையில் தந்திரமாகவும்  பலவந்தமாகவும்  திணிக்கிறது.

விவசாயிகள்,தொழிலாளர்கள் ஏழை எளிய மக்களின் நலன்களை ‘’அடித்துப்பறிக்கிற’’ மத்திய அரசின் கொடுமையான வேளாண்மை திருத்தச் சட்டங்கள்.பல்லாண்டு காலமாக பாதுகாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் கொடுமை. போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் பறிப்பு.தகுதி இருந்தும் தமிழ்நாட்டு மாணவர்களை தற்கொலைக்கு தள்ளும் ‘’நீட்’’ தேர்வு முறையை   திரும்பப்பெற வலியுறுத்தி. மாநிலஅரசின் உரிமைகள் பறிப்பு. நரித்தந்திர அரசியல் அடக்குமுறை. தமிழக அடிமை எடப்பாடி அரசு பதவிக்காக துணைபோகும் அவலங்கள். ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கட்டிடத்தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களின் ‘’கரோனாகால’’  வருமான இழப்புக்கு ஈடுகட்டும் விதமாக மாதம் 7500ரூ. இழப்பீடு வழங்கக் கோரி, மத்தியமாநில அரசுகளின் காதுகளில் விழும்படி ‘’போர்  சங்கநாத’’ ஒலி எழுப்பும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுக்க மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக தலைநகர் சென்னையில் அக்டோபர் 12 திங்கள் காலை 11.00 மணியளவில்  கிண்டி தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் துவக்கி வைக்க சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை,மாதர்சங்க மாவட்டக் குழு உறுப்பினர் சுசீலா,மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் வி.கே.கோபாலன். திருவான்மியூர், தரமணி ஆட்டோ, ஷேர்ஆட்டோ தொழிற்சங்கவாதிகள் பலரோடு, சீனிவாசன், பத்மநாபன்,சி.சு.கோவிந்தன்,டீகாராமன்,போன்றோர் சேர்ந்து உரத்த குரலில் மத்திய மாநில அரசை நோக்கி கேட்ட அறிவுபூர்வமான கோபமான கேள்விகள் செவிடன் காதில் ஊதிய சங்காகி விடாமல் இருக்க வேண்டும். ஆக்க பூர்வமான கேள்விகள் கேட்பவர்கள் மீது மத்திய அரசு ‘’அர்பன் நக்ஸல் முத்திரை’’ குத்தி ஜெயிலில் பிடித்துதான் போடும் என்ற பயம் இன்றி நடந்த எழுச்சிமிக்க மறியல் போரில் கைக்குழந்தைகளுடன் பெண்களும் ஆண்களும் மாணவ மாணவிகள், ஆட்டோ ஷேர் ஆட்டோ  தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், சென்னை புறநகரை  ஒட்டியுள்ள விவசாயப் பெருங்குடி மக்களும் பல நூற்றுக்கணக்கில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நம் கேள்விகளுக்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசனின்  ‘’நறுக் சுருக்’’ பதில்கள் ,

நக்கீரன் ; விவசாயிகளுக்கான மோடி அரசின் திட்டங்கள் பற்றி தங்கள் பதில் என்ன?

இரா.முத்தரசன்: ‘’சர்க்கரை’’னு பேப்பர்ல எழுதிட்டு நாக்கால நக்குனா இனிக்குமா! இனிக்காது. நரேந்திரமோடி அரசின் திட்டங்கள் போலியானவை. தந்திரமானவை.  

கேள்வி: கடம்பூர் ராஜு திமுக கூட்டணி உடைந்து போகும் என்கிறாரே?

பதில்: அது அவர் ஆசை.பகல் கனவு. பேராசைகளின் வெளிப்பாடு. திமுக கூட்டணி கட்சிகளுக்குள் ஒரு அருமையான புரிதல் உள்ளது.

கேள்வி: திமுக கூட்டணியில் சில கட்சிகள் தனித் தனி சின்னத்தில் நிற்கும் என்கிறார்கள்! கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை என்ன?

பதில்: கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பற்றி திமுக தலைமை நன்கு புரிந்து வைத்துள்ளது. எங்கள் சின்னம் பற்றி அவர்கள் சிறிதளவு கூட யோசிக்க மாட்டார்கள். எங்கள் கட்சி தேசியக் கட்சி. நாங்கள் கதிர் அரிவாள் சின்னத்தில்தான் நிற்போம்.சி.பி.எம்.அரிவாள் சுத்தியல் சின்னத்தில்தான் நிற்கும். அது திமுக தலைமைக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு அந்த புரிதல் மிக தெளிவாகவே உள்ளது.

கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளின்  ‘’கைக்கூலி தரகர்கள்’’ கிளப்பி விடும் பூச்சாண்டி வேலைகளில் இது ஒன்று. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பி.ஜே.பிக்கும் ,கொள்ளைக்கார அ.தி.மு.க.வுக்கும் வாக்களிப்பதில்லை என்று மக்கள் உறுதியான முடிவெடுத்து விட்டார்கள். மக்கள் மன்றத்தில் அவர்கள் தோற்பது உறுதியாகி விட்டது.

குறிப்பு:மறியல் பற்றி திருவான்மியூர் காவல்துறை உதவி ஆணையர் உயர்திரு.பொ.க.ரவி அவர்களிடம் நக்கீரன் சார்பாக அணுகிய போது ‘’பொதுமக்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் கட்டுப்பாடாக மறியல் நடந்தாலும் கொரோனா காலத்தில் பெருங்கூட்டமாக கூடிய காரணத்தால் அனைவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்படலாம்’’ என்பதாக  கூறினார்.


கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள்:

''இந்தியாவின் உயிர்நாடி விவசாயம்.விவசாயம்.
பொருளாதார உயிர்நாடி தொழிலாளர் தொழிலாளர்.
விவசாய,தொழிலாளர் நலனுக்கு மத்திய அரசு வேட்டு
திருத்தப்பட்ட சட்டங்களை மத்திய அரசே வாபஸ் வாங்கு.
குறைந்த பட்ச ஆதார விலைக்கு வேட்டு வைக்கும்
சட்டத்துக்கு விவசாயிகள் வேட்டு வைப்போம்.
அதானிக்கும் அம்பானிக்கும் பாதுகாப்பு துறையை விற்காதே.
இந்தியாவின் கோவில்கள் பொதுத் துறையை விற்காதே.
அதானிக்கு விமான நிலையங்களை விற்காதே!
துணை போகாதே!துணை போகாதே!
துப்புக்கெட்ட மோடிக்கு எடப்பாடி அரசே
துணை போகாதே!  
கொரோனா போர்வையில் வருகிற
கொடுமையான சட்டங்களைத் தூக்கியெறிவோம்.
குப்பைக் கூடையில் தூக்கி எறிவோம்.
கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழக அரசை புறக்கணிக்காதே.
இந்திய வரலாற்றைத் திருத்தாதே!
மனு வாதத்தை திணிக்காதே!
பெண்களுக்கு பாதுகாப்பற்ற மோடி அரசை எறிவோம்'' என்ற முழக்கங்கள் வைக்கப்பட்டது.