ADVERTISEMENT

என் தற்கொலையை விட டாக்டரை கொலை செய்தது தான் சரி - விசாரணை அதிகாரியை அதிர வைத்த மாணவி ஈஸ்வரி!

12:42 PM Jul 13, 2018 | Anonymous (not verified)

நேற்று நக்கீரன் இணைதளத்தில் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் காவிரி கரையில் கொல்லப்பட்ட அதே பகுதியில் சென்னை டாக்டர் கொலை என்று எழுதியிருந்தோம். செய்தியின் கடைசியில் டாக்டருக்கு திருச்சியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த தொடர்பில் கொலை நடந்திருக்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற ரீதியில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்று நாம் எழுதியிருந்தோம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் ஏசி இராமசந்திரனின் சீரிய விசாரணையில் டாக்டரின் செல்போனில் கடைசியாக பேசி எண் திருச்சி உறையூர் ஈஸ்வரி என்று கண்டுபிடித்ததும். ஈஸ்வரி எங்கே இருக்கிறார் என்பதை போலீஸ் தேடுகிறது என்பதை உணர்ந்ததும் சென்னைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த ஈஸ்வரி இறங்கி திரும்ப பஸ் ஏறி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் வந்து நான் தான் கொலை செய்தேன் என்று சொல்லி ஸ்ரீரங்கம் போலீசை அதிர வைத்தார். கொலைக்கு கூலியா 50 ஆயிரம் கொடுத்தேன் என்று அடுத்தடுத்து அதிரடியாக பேசி அந்த மகளிர் காவல்நிலையத்தையே கதி கலங்க வைத்தார்.

ஸ்ரீரங்கம் மகளிர் காவல்நிலையத்தில் ஏசி இராமசந்திரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சித்ரா ஆகியோர் முன்னிலையில் மிக கேஷ்வலாக பேச ஆரம்பித்தார். குளித்தலை எனது பூர்வீக ஊர். தந்தை சொந்தமாக லாரி ஓட்டுகிறார். அம்மா கிடையாது. ஒரு தங்கை இருக்கிறாள். நான் ஈஸ்வரி திருச்சி உறையூரில் உள்ள ஆங்கில வழி பள்ளியான தனலெட்சுமி பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். கடந்த 2013ல் நடந்த பொது தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்தேன். மாநிலத்தில் இரண்டாவது மாணவியாகத் தேர்வு பெற்றேன். அதன்பின், பிளஸ் 2 தேர்வில் 1183 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்றேன். சென்னையில் சி.ஏ. படித்து வருகிறேன். சி.ஏ. முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்து சென்னை பாரிமுனையில் ஒரு ஆடிட்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். கடந்த 6 மாதம் முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தேன். பின்னர், விடுமுறை முடிந்து திருச்சி சென்று அங்கிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டேன்.



நான் பயணித்தது முன்பதிவு இல்லாத பெட்டி. கூட்டம் அதிகமாக இருந்ததால் தரையில் அமர்ந்திருந்தேன். அதே ரயிலில் பிசியோதரபிஸ்ட் மருத்துவர் விஜயகுமார் ஏறினார். அப்போது அவர் என் அருகில் அமர்ந்து கொண்டார். சென்னை செல்லும் வரை இருவரும் பேசிக்கொண்டே சென்றோம். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றதும், என் செல்போன் எண்ணை பெற்று அவர் செல்போன் நம்பரை வழங்கினார். போனில் அடிக்கடி பேசி நட்பு வளர்ந்தது. சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தங்கியிருந்த விஜயகுமார், நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக இருந்தார். ஒரு நாள் என்னிடம் பேசும் போது எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னவுடன் நீ கிளம்பி வா உனக்கு வைத்தியம் பாக்குறேன் என்று அவர் சொன்னார். உடனே நான் சென்றேன். அப்போது அவர் எனக்கு கூல்டிரிங்ஸ்சில் மயக்கம் மருந்து கொடுத்து என்னை மயக்க நிலையில் வைத்து நாசப்படுத்தி விட்டார். நான் அழுது புலம்பும் போது கட்டாயம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லி என்னை சமாதானம் படுத்தினார். எனக்கு தெரியாமல் விஜயகுமார் அதை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.


ஒரு நாள் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். அப்போது தான் அவர் திருமணம் ஆனவர் என்பதும், 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதனால் பிரச்னை ஏற்பட்டது. அதற்கு அவர், உனக்காக மனைவியை விவாகரத்து செய்து விடுவதாக கூறினார். அதற்கு நான் படிக்க வேண்டும் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி நான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஆனாலும் விஜயகுமார் விடாமல் என்னை தொந்தரவு செய்தார் அவருக்கு தெரியாமல் நான் நுங்கம்பாக்கத்தில் இருந்து கோடம்பாக்கத்திற்கு சென்று தனியார் விடுதியில் இருந்தேன். அதனை கண்டுபிடித்த விஜயகுமார், நேரில் வந்து `என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நாம் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதனை பேஸ்புக்கில் அப்லோடு பண்ணுவேன்’ என்று மிரட்டினார். இதை கேட்டவுடன் எனக்க அதிர்ச்சி ஏற்பட்டது. எவ்வளவு புத்திசாலியாக இருந்து படித்தும் நல்ல மதிப்பெண் இருந்தும் என் வாழ்க்கை இவ்வளவு மோசமாக போனதற்கு நானே காரணமாகி விட்டேனே என்று என்னை நினைத்து நானே நொந்து கொண்டேன். நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். என் தங்கையின் வாழ்க்கை என்னாவது என்று யோசித்து யோசித்து கடைசியில் ஒரு முடிவு செய்தேன். என் தற்கொலையை விட அவனை கொலை செய்வது தான் சரியான முடிவு என்று ஒரு பிளான் ரெடி பண்ணி தான் சத்திரத்தில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி மாரிமுத்து என்பவர் போதையில் எல்லோரையும் மிரட்டிக்கொண்டு இருந்தார். அவரை சந்தித்து, எனக்கு நடந்த கொடுமையை கூறி, அவனை கொலை செய்ய வேண்டும் என்று கதறி அழுதேன். என் கதையை கேட்டதும் விஜயகுமாரை கொல்ல சம்மதித்தார். கொலைக்கு கூலியாக அதிக பணம் கேட்டார். ஆனால் நான் ரூ.55 ஆயிரம் தருவதாக பேசி முன்பணமாக ரூ.5 ஆயிரம் கொடுத்து, அவரின் செல்போன் நம்பரை வாங்கினேன்.

அதைத்தொடர்ந்து அன்று இரவே விஜயகுமாருக்கு போன் செய்து திருமணம் குறித்து பேச வேண்டும் எனகூறி திருச்சி வாங்கன்னு சொன்னேன். இதன்பின், மறுநாள் கொலை செய்ய வேண்டிய இடத்தை நேரில் பார்க்க சத்திரம் பகுதியில் இருந்து நாங்கள் இருவரும் புறப்பட்டோம். அப்போது மாரிமுத்துவுடன் அவரது நண்பர்கள் 2 பேரும் வந்தனர். கல்லணை செல்லும் வழியில் திருவளர்ச்சோலை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காவிரி கரையை தேர்ந்தெடுத்தேன். விஜயகுமார் சென்னையில் இருந்து பொன்பரப்புக்கு வந்தார். மனைவியை பார்க்க ஈரோடு செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்துக்கு மாலை 5 மணிக்கு வந்தார். அங்கு தயாராக இருந்த நான், விஜயகுமாரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் காவிரி கரைக்கு சென்றேன். நானும் விஜயகுமாரும் கடைசியாக இறுதியாக அவனுடைய எல்லா டார்ச்சருக்கும் முடிவு கட்டும் விதமாக அவனுடன் நான் உறவு வைத்துக்கொண்டு அவனை நினைவு இழக்கும் நேரம் பார்த்து புதர் மறைவில் இருந்த மாரிமுத்து உள்பட 3 பேரும் அங்கு கத்தியுடன் வர நான் பயந்து ஓடுவதை போல் அங்கிருந்து சென்றேன். 3 பேரும் விஜயகுமாரை ஒரே கத்தியால் மாறி மாறி குத்தி கொலை செய்து எனக்கு கொடுத்த டார்ச்சருக்கு நிம்மதி கொடுத்தனர்.

இவ்வாறு ஈஸ்வரி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த தாராநல்லூரை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் மாநகராட்சி ஊழியர் கணேஷ், மேளம் அடிக்கும் தொழிலாளி கும்பா (எ) குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விஜயகுமாரின் மனைவி தன்னுடைய கணவன் இளம் கல்லூரி மாணவியின் வாழ்க்கையை சீரழித்த விசயத்தை கேள்விப்பட்டவுடன் அவர், எனக்கு கணவரே கிடையாது. அவரின் உடலை பார்க்க கூட எனக்கு விருப்பம் இல்லை. அவரது உடலை வாங்க மாட்டேன் என்று சொல்லி திருச்சி மருத்துவமனையில் இருந்து கிளம்பினார்.

எவ்வளவு தான் அறிவும் படிப்பும் இருந்தும் வாழ்க்கையில் எது கூடா நட்பு என்பதை தெரிந்து கொள்ளும் வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்ளாமல் இருந்து விட்டாரே என்று. தப்பு தப்பான பழக்கம் கண்டிக்க பெரியவர்கள் இல்லாத நிலையில் இளைய சமூகத்தினரின் வாழ்க்கை பரிதாபமாக முடிவும் என்பது ஈஸ்வரியின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT