ADVERTISEMENT

முறைகேடு செய்த ஊராட்சி நிர்வாகம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை 

04:46 PM May 09, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சியில் கட்டடங்களுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்த ஊராட்சி நிர்வாகம். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்டது நல்லம்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் தனியாக வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய குழு அலுவலகம், வட்டார வேளாண்மை அலுவலகங்கள், வட்டார மருத்துவமனை, பேருந்து நிலையம், வாரச்சந்தை, மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்தும் அமைந்துள்ளது.

மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ஒரே ஊராட்சியாக நல்லம்பள்ளி ஊராட்சி இருந்து வருகிறது. நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களும் அரசு அலுவலர்களும் ஆயிரக்கணக்கானோர் நல்லம்பள்ளி ஊராட்சிக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் காரணத்தினால் அனைத்து விதமான வணிக நிறுவனங்கள் அதிக அளவில் பெருகி நல்லம்பள்ளி ஊராட்சிக்கு அதிக லாபத்தை ஈட்டி வருகிறது.

இந்த நிலையில் கட்டட அனுமதிகள், கல்லூரி அனுமதிகள் உள்ளிட்ட அனைத்திலும் தவறான வழிமுறைகள் மூலம் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. கட்டட அனுமதி வழங்க வேண்டும் எனில் ஊராட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை 2000 சதுர அடிக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு மேல் உள்ள கட்டடங்கள் அனைத்தும் டிடிசிபி அனுமதி பெற்று பிறகு ஊராட்சி அனுமதியைப் பெற வேண்டும் என்ற அரசு விதிமுறை உள்ளது. ஆனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பல் பொருள் அங்காடி தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமான அளவில் 13 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள ஊராட்சி செயலாளரும், தலைவரும் சேர்ந்து கட்டட அனுமதி வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாமல் 1500 சதுர அடி என்ற வீதம் 3 பிரிவாகப் பிரித்து 4500 சதுர அடிக்கு மட்டும் அனுமதி வழங்கி கட்டடம் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். அதேபோல் சேலம் தர்மபுரி நெடுஞ்சாலையில் உள்ள மிகப்பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர், சேஷம்பட்டி கூட்ரோடு பகுதியில் சுமார் 10000 சதுர அடி பரப்பளவில் தற்பொழுது அமைய உள்ள டைல்ஸ் ஷோரூமிற்கு 2000 சதுர அடி என்ற வீதத்தில் மூன்று பிரிவுகளாக 6000 சதுர அடிக்கு அனுமதி அளித்துள்ளார். மேலும் பேருந்து நிலையத்திற்கு எதிரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடம் உள்ளிட்ட அனைத்திற்கும் டிடிசிபி அப்ரூவல் பெற வேண்டிய கட்டடங்களை முறைகேடாக ஊராட்சியின் கட்டுப்பாட்டில் வைத்து தனித்தனியாக பிரித்து தனி கட்டடங்கள் போல் காட்டி அவர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.

நல்லம்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ள வணிக நிறுவனங்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மருத்துவமனைகள், டைல்ஸ் கம்பெனிகள், கார்மெண்ட்ஸ் நிறுவனங்கள், மாடர்ன் ரைஸ் மில் உள்ளிட்ட அனைத்தும் முறையாக டிடிசிபி அனுமதி பெற்றிருந்தால் அரசுக்கு வர வேண்டிய மற்றும் ஊராட்சி அலுவலகத்திற்கு வரவேண்டிய நிதிகள் நேரடியாக வந்து சேர்ந்திருக்கும்.

தற்போது பணியில் உள்ள ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரால் அரசுக்கு வர வேண்டிய அனைத்து நிதிகளும் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரணை மேற்கொண்டு ஊராட்சி நிர்வாகத்திற்கும், அரசுக்கு வர வேண்டிய வருவாயை முறையாகப் பெற்றுத்தர வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஊராட்சி செயலாளர் மற்றும் தலைவர் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் அளித்துள்ள கட்டட அனுமதியை ரத்து செய்து புதிய அனுமதியைப் பெறுவதற்கு ஆணையிட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT