ADVERTISEMENT

சார் பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை... 5 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்கள் சிக்கின!

07:11 AM Sep 29, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் விடிய விடிய நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சேலம் சூரமங்கலம் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக, சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜூவுக்கு அடிக்கடி புகார்கள் சென்றன. இதையடுத்து ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர், செப். 27ஆம் தேதி மாலை, சூரமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

மாலை 05.45 மணியளவில் தொடங்கிய சோதனை, மறுநாள் அதிகாலை 05.45 மணிக்கு முடிந்தது. இதில், அந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஊழியர்களிடம் இருந்து சில ஆவணங்களையும், முக்கிய டைரிகளையும் கைப்பற்றினர். இதுகுறித்து சூரமங்கலம் சார் பதிவாளர் இந்துமதி, தரகர்கள் உட்பட 6 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புப் பிரிவினரின் இந்த திடீர் சோதனைக்கு வேறொரு நோக்கமும் இருப்பதாக பத்திரப்பதிவுத்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்தப் பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுபவர் காவேரி. கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மண்டலத்தில் காவேரியை மீறி பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகள் கூட அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முடியாது. அந்தளவுக்கு அதிகாரத்தில் கொடிகட்டிப் பிறந்தார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

முந்தைய ஆளுங்கட்சியின் விவிஐபிக்களுக்கு நெருக்கமானவராக பார்க்கப்பட்டார் காவேரி. அதிமுக புள்ளிகள் பினாமிகள் பெயர்களில் சொத்துகளைப் பத்திரப்பதிவு செய்யும்போதும், பெயர் மாற்றம் செய்யும்போதும் அதற்கான வேலைகளைக் காதும் காதும் வைத்ததுபோல் கச்சிதமாக முடித்துக் கொடுத்துள்ளார் காவேரி.

இந்த அலுவலகத்தில் சார் பதிவாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இருந்தாலும் கூட அதிமுக புள்ளிகளுக்கான பணிகள் என்று வரும்போது அதை உதவியாளரான காவேரியிடம்தான் ஒப்படைத்து வந்துள்ளனர்.

பொதுவாக பத்திரப்பதிவுத்துறையில் உதவியாளர் நிலையில் உள்ள ஊழியருக்கென தனி அறை கிடையாது. ஆனால் அதிமுகவின் விவிஐபிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் காவேரிக்கு மட்டும் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டது.

இலை கட்சிக்காரர்களுக்குப் பத்திரப்பதிவு நடக்கிறது என்றாலே அப்பணிகளை இரவு பகலாக முடித்துக்கொடுத்திருக்கிறார். அதுபோன்ற பணிகளைப் பெரும்பாலும் மாலை 06.00 மணிக்கு மேல்தான் வைத்துக்கொள்வாராம்.

இந்த நிலையில்தான் செப். 27ஆம் தேதியன்றும் காவேரி சில அதிமுக புள்ளிகளின் சொத்துகளைப் பதிவு செய்ய இருப்பதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்துதான் காவேரியை கையும் களவுமாக மடக்கிப்பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் இறங்கியிருக்கிறார்கள்.

எனினும், இந்த சோதனையில் காவேரியிடமிருந்து லஞ்சப்பணம் பிடிபட்டதாக தெரியவில்லை. அந்த அலுவலகத்தில் இருந்து மொத்தமாக கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதிமுகவின் விவிஐபிக்கு நெருக்கமான ஊழியரைக் குறிவைத்து நடந்த இந்த சோதனை, பத்திரப்பதிவுத்துறை மற்றும் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT