ADVERTISEMENT

அமைச்சர்கள் மீதான விசாரணை; செப். 20ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

12:02 PM Aug 23, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியின் போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த 10 வருடங்களாக நடந்து வருவதாகவும், அதிமுக ஆட்சிக் காலத்தில் தன் மீது அவதூற்றுக்காகப் பதியப்பட்ட வழக்கு என்றும் கோரி இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தது. அதேபோல், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவரையும் வழக்கில் இருந்து விடுவித்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தற்போது இரண்டு அமைச்சர்கள் மீதான புகார்களையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, “தாமாக முன் வந்து வழக்கை எடுப்பதற்கு முன்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுகளை முன்வைக்கிறோம். அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரியின் விசாரணை முறையில் தவறு ஏதும் இல்லை. எனவே இந்த விசாரணையின் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் களங்கப்படுத்தப்படுவர்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப்போகவே செய்கின்றனர். உண்மையில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்படும் விதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வரும் செப். 20ம் தேதி பதில் தரவேண்டும்” எனத் தெரிவித்து உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப். 20ம் தேதி நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT