
அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளைத்தாமாக முன்வந்து மீண்டும் மறு விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்றே நடப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 - 2010 திமுக ஆட்சிக் காலத்தில்சுமார் 44 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகசுந்தரம் ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அதேபோல் 76 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்குகளில் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புகளுக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கு மறு விசாரணையை கையில் எடுத்துள்ளார். இந்த வழக்குகள் மீண்டும் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, கீழமை நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவை சட்ட விரோதம் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலக வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் தங்கம் தென்னரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ரமேஷ், 'நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரக்கூடிய விஷயத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'தலைமை நீதிபதியின் அனுமதியை பெற்றுத்தான் தாமாக இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், எந்த நிலையிலும் வழக்குகளின் விசாரணையில் இருந்து தான் விலகப் போவதில்லை எனக் கருத்து தெரிவித்து, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தொடர்பான வழக்கை நவம்பர் இரண்டாம் தேதிக்கும், தங்கம் தென்னரசுவினுடைய வழக்கின் விசாரணையை நவம்பர் ஒன்பதாம் தேதிக்கும் ஒத்திவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)