Skip to main content

எடப்பாடிக்கு ராஜேந்திர பாலாஜி சூட்டும் புளுகுப் புகழாரங்கள் பதவியை மீட்டுத்தரப் பயன்படலாமே தவிர..." -KKSSRராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கூட்டறிக்கை

K. T. Rajenthra Bhalaji

 

விருதுநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 

எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தில் உளறல் துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. சூரியனைப் பார்த்து ஏதோ ஒன்று குரைத்ததைப் போல அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ‘வறட்டுத்தவளை வாயாலே கெடும்' என்ற பழமொழிக்கு நடமாடும் எடுத்துக்காட்டாக விளங்கி, எடப்பாடியின் அடிப்பொடி எனச் சொல்லிக்கொண்டே பத்திரிகை பேட்டிகளில் அவ்வப்போது தனது வீராவேசத்தைக் காட்டப்போய் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, ராஜேந்திர பாலாஜியின் முகத்தில் கரி பூசப்பட்ட பிறகு மூன்று மாத காலமாக ஆளும்கட்சியினரால் தனிமை சிறையில் வைக்கப்பட்டதால் மூளை சிதைவுக்கு உள்ளாகியும், ஏதாவது லாவணி பாடி இழந்த பதவியை மீண்டும் பெறலாமா என்ற நப்பாசையிலும் இப்போது எடப்பாடி பழனிசாமியை வானளாவப் புகழ்ந்தும், தி.மு.க.,வை விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர்.

கரோனா முதலில் பலி வாங்கியதே ராஜேந்திர பாலாஜியின் பதவியைத்தான் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். நாட்டு மக்களை பழிவாங்குவதற்குத்தான் கரோனா வந்துள்ளது' என்ற பொருளில் மார்ச் 22-ம் தேதி  போட்ட ட்விட்டர் பதிவைப் பார்த்து, அன்று மாலையே அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதனால் கரோனா மீது அதிகமான ஆத்திரத்தில் ராஜேந்திர பாலாஜி இருப்பது அவரது அறிக்கை மூலமாகத் தெரிகிறது.

பொதுவாக ராஜேந்திர பாலாஜி எவ்வகை மனிதர் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். சட்டையை கிழிங்க என்பார். கதவை உடைங்க என்பார். எம்.பி.,யை சுடுங்க என்பார். கமல் நாக்கை அறுங்க என்பார். இசுலாமியர்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்பார். பாகிஸ்தானுக்கு போக வேண்டியது தானே என்று சொல்வார். பயங்கரவாதம் வரத்தான் செய்யும் என்பார். அண்ணாவே எம்.ஜி.ஆரால் தான் ஜெயித்தார் என்பார். பெரியார் பற்றி ரஜினி பேசியது சரி என்பார். மொத்தத்தில் மரை கழன்று நடமாடும் மந்திரிகளில் முதலாமவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இந்திய தண்டனை சட்டப்படி வழக்குப் போட வேண்டுமானால் எல்லாப் புகாருக்கும் உள்ளாகக் கூடியவர் அவர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும்போதே நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கினைச் சந்தித்து கொண்டிருக்கும் அமைச்சர் அவர். அத்தகைய மனிதர் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் அவரது அறிக்கைக்கு பதில் சொல்லியாக வேண்டி உள்ளது.

கரோனா ஒழிப்பில் இந்தியாவே தமிழகத்தை பாராட்டுகிறதாம். இந்தியாவே பாராட்டுகிறது என்றால் யார் பாராட்டுவது என்று சொல்ல வேண்டாமா? தமிழகத்தில் மொத்தம் இன்றுவரை 48 ஆயிரம் பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்திய அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு, இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதன்பிறகுதான் மற்ற மாநிலங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் இதுவரை 528 உயிர்களை இழந்திருக்கிறோம். இந்திய அளவில் பலியானோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். இதுதான் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றிய லட்சணமா

இறப்பு விகிதத்தைக் குறைத்தோம் என்று சொல்லிக் கொள்வது பெருமை அல்ல; மரணத்தை மறைத்துள்ளீர்கள் என்பதைத்தான் தினமும் ஊடகங்கள் அம்பலப்படுத்தி உள்ளதே!

மக்கள் நல்வாழ்வுத் துறை தரும் புள்ளிவிவரமும் சென்னை மாநகராட்சி தரும் கணக்கும் ஒப்பிட்டுப்பார்த்தால் பொய்க்கணக்கு என்பதை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக இருந்தவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டு அதனை விசாரிப்பதற்கு குழுவும் நியமித்த காரணத்தால் தூக்கியடித்ததை தமிழகம் பார்த்தது.

ஜனவரி மாதமே தடுப்புப் பணியைத் தொடங்கிவிட்டோம் என்று சட்டமன்றத்தில் பொய்ச் சொல்லியும், இது எல்லாருக்கும் வராது என்று மாய்மாலம் காட்டியும் நாட்டு மக்களை ஏய்த்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரது கையாலாகாத்தனத்துக்கு தமிழ்நாடு இதுவரை கொடுத்துள்ள விலை 528 உயிர்கள். 48 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட கொடூரமான நிலைமை. இதை எல்லாம் மறைப்பதற்காக நித்தமும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

சட்டமன்றத்தை ஒத்திவைக்கச் சொன்ன தி.மு.க. தலைவர், அதே நாளன்று வடசென்னையில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார் என்கிறார் ராஜேந்திர பாலாஜி. தி.மு.க. தலைவர் அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லவில்லை. 'கரோனா நோய்ப் பரவிவருவதால் உங்களது போராட்டத்தை ஒத்தி வையுங்கள்' என்று மக்களிடம் கோரிக்கை வைக்கத்தான் சென்றார். அது அவரது உரையில் இருக்கிறது. தெளிவான மனநிலையில் அதனைப் படித்துப் பார்க்கவும்!

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை பரிசோதிக்காமலும், கோயம்பேடு சந்தையை திறந்து வைத்தும், ஊரடங்கு என்று சொல்லி தளர்வுக்கு மேல் தளர்வுகள் அறிவித்தும், மதுபானக் கடைகளைத் திறந்தும், தவறுக்கு மேல் தவறு செய்ததும்தான் இந்த நோய்ப்பரவலுக்கு மிக முக்கியமான காரணம். இதற்கு முழுப்பொறுப்பு ஏற்கவேண்டியது ஆளும்கட்சியும் முதலமைச்சரும், அமைச்சர்களும் தானே தவிர வேறு யாருமல்ல.

வெள்ளந்தி முதல்வராம். விவசாயிகளின் தோழராம். நல்லாட்சிக்கு இலக்கணம் வகுத்தவராம். விருதுகள் பெற்றவராம். அம்மாவின் தொண்டராம். எடப்பாடி பழனிசாமிக்கு புளுகுப் புகழாரங்களை சூட்டுகிறார் ராஜேந்திர பாலாஜி. இவை எல்லாம் ராஜேந்திர பாலாஜியின் இழந்த பதவியை மீட்டுத்தரப் பயன்படலாமே தவிர, மக்களைக் காப்பாற்றப் பயன்படாது. 

'ஒன்றிணைவோம் வா' திட்டத்தை குறை சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை அரசாங்கம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குத்தானே இருக்கிறது. இந்தக் கடமையைச் செய்யத் தவறியது அ.தி.மு.க. அரசு. ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை, பொறுப்பை ஒரு எதிர்க்கட்சி செய்திருக்கிறது. இலட்சக்கணக்கான மக்களுக்கு மளிகை பொருட்களும், காய்கறிகளும், நிதி உதவியும், உணவும் தி.மு.க. கொடுக்கிறதே என்ற ரோசமாவது இந்த அரசுக்கு வந்திருக்க வேண்டும். தி.மு.க. செய்வதை எல்லாம் நாங்கள் தருகிறோம் என்று முன்வந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்குத்தான் மானம், வெட்கம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கிற இழிபிறவிகள் என்பதால் முதல்வரில் இருந்து அமைச்சர்கள், ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதுங்கு குழிக்குள் பதுங்குவதைப் போல வீட்டுக்குள் முடங்கிவிட்டார்கள்.

ஏழைகளின் அழுகுரல், அப்பாவிகளின் கண்ணீர், வாழ்வாதாரம் இழந்தவர் ஓலம் இவர்களது கல் நெஞ்சைக் கரைக்கவில்லை. இன்னும் சொன்னால், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் துயரத்தைக் கூட இவர்கள் துடைக்கவில்லை. 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலமாக சாதிமதம் பார்க்காமல் மட்டுமல்ல, கட்சி பேதம் பார்க்காமல் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த கரோனா காலத்தில் களப்பணி ஆற்றி இருக்கிறார். இலட்சக்கணக்கான குடும்பங்களின் கண்ணீர் துடைத்திருக்கிறார். இது பலனைப் பெற்ற மக்களுக்கும் தெரியும். பலன் பெற்றவர்களை அறிந்த கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும். எனவே, ராஜேந்திர பாலாஜி போன்ற கேடுகெட்ட மனிதர்களின் நற்சாட்சிப் பத்திரம் கேட்டு நிற்கவில்லை தி.மு.க.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது. ஒரு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் கட்டளையிடுகிறார். இது மக்களுக்கு நன்கு தெரியும்.

எங்கள் இயக்கத்தின் மாவீரன் ஜெ.அன்பழகன் இறப்பையும் கொச்சைப்படுத்தும் எச்சைத்தனத்தை இனிமேலாவது ஆளும்கட்சியினர் நிறுத்த வேண்டும். 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் நாள் ஜெயலலிதா இறந்து போனார். அவர் இறப்பில் சந்தேகம் கிளப்பியவர் இன்றைய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம். அமைச்சர் விஜயபாஸ்கருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது, அவரைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும் என்றார் பன்னீர்செல்வம். சுமார் மூன்றரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. உங்களுக்கு பதவிப் பிச்சை போட்டு, கோடிகளில் புரள வாய்ப்பளித்த உங்கள் அம்மாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள். ஆறுமுகச்சாமி ஆணையமே பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறதே? அதன் சுவாசக்குழாயை நிறுத்தியது யார்? ஜெயலலிதாவுக்கு நன்றி காட்டிய இலட்சணம் இதுதானா? இந்த மர்மத்தை வெளிப்படுத்தி விட்டு எடப்பாடிக்கு, 'அம்மாவின் தொண்டர்' என்ற பட்டம் தாருங்கள். ஏற்கனவே, மக்கள் அவருக்கு 'கரோனாவால் கொன்றான்' என்ற பட்டத்தை கொடுத்துவிட்டார்கள்!

கையாலாகாத இந்த ஆட்சியில் அமைச்சராக இருப்பவர் ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினரின் குடும்பமே கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதை எண்ணிப்பார்த்தாவது மல்லாக்க படுத்து எச்சில் துப்பும் வேலையை விட வேண்டும்.

கரோனா காலத்தில் இலட்சக்கணக்கானோர் வேலை இழந்து நிற்கிறார்கள். ஆனால் இந்த கரோனா காலத்தில் 47 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும், 15 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாகவும் எடப்பாடி சொல்லிவரும் பொய்களை வழிமொழிகிறார் ராஜேந்திர பாலாஜி. அ.தி.மு.க. ஆட்சியில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட இரண்டு மாநாடுகள் நடந்துள்ளது. முதலமைச்சர் உலகம் சுற்றி வந்தார். அதில் எத்தனை தொழில்கள் தொடங்கினார்கள், எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்ற தகவலே இதுவரை இல்லை. இந்த நிலையில் கொரோனா காலத்தில் தொழில் தொடங்கினோம், வேலை கொடுத்தோம் என்றால் யார் நம்புவார்கள்? இப்படி எல்லாம் சொல்வது, மக்களை திசை திருப்புவதற்காகத் தானே தவிர வேறல்ல. 

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. 'கொல்லைக்கு போகும் போது வெள்ளரிப்பழம் எடுத்துப் போகக்கூடாது' என்று. அதுமாதிரியான சம்பவம் தான் கொரோனா காலத்தில் தொழில் தொடங்கிவருகிறோம் என்பதும்.

எடப்பாடியை காப்பாற்றுவது இருக்கட்டும். பால்வளத் துறையிலேயே ஆயிரத்தெட்டு கோல்மால்கள் நடந்து வருகின்றன. ஆவின் வட்டாரமும் பால் முகவர்களும் சொல்லும் குற்றச்சாட்டுகள் மலையளவு உள்ளன. பால் வாங்குவதில் பெறப்படும் கமிஷன்கள், மேற்கு மாவட்ட பால் விற்பனையில் விநியோகிக்கப்பட்ட போலி செக்குகள், நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லி பால்விலையை ஏற்றிவிட்டு, புதிதாக ஆறு ஒன்றியங்களை ஏற்படுத்தி நிர்வாகச் செலவுகளை அதிகப்படுத்தியது, ஒன்றியங்களில் அவுட் சோர்சிங் முறையில் இருந்த பணியிடங்களை நேரடி நியமனம் என்ற பெயரில் விற்பனை செய்தது, விதிமுறைகளுக்கு முரணனான பணி நியமனங்கள், பதவி உயர்வுகள் என்று அதன்மூலம் பல கோடி ரூபாய் இழப்புகள், திருப்பதிக்கு மதுரையில் இருந்து அனுப்பிய இரண்டு லோடு நெய் தரம் சரியில்லையென்று திருப்பி அனுப்பியதை களவாடிய புகார், மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர் பதவிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள், மதுரை பால் பண்ணையில் நடந்த முறைகேட்டுக்கு காரணமானவர்களை காப்பாற்றியது, இயந்திர தளவாடங்கள் வாங்கியதில் நடந்துள்ள இமாலயத் தவறுகள், ஆவின் பால் பைக்கான பாலிதீன் பிலிம் கொள்முதல் முறைகேடு, தென்மாவட்டங்களில் பணிபுரியும் ஆவின் ஊழியர்களுக்கான மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் நடந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்களை காப்பாற்றுவது, ஆருத்ரா ஊழல் - என்று ராஜேந்திர பாலாஜி பதில் சொல்ல வேண்டிய விவகாரங்கள் பல இருக்கிறது. முதலில் இந்தக் கொள்ளைகளுக்கு வரிசையாக கே.டி.ஆர். பதிலளிக்க வேண்டும்!

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. கூடாரத்தில் ராஜேந்திர பாலாஜியும், ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினரும் நடத்திக் கொண்டிருக்கும் உள்குத்து விவகாரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததால் குமுதம் ரிப்போட்டர் பத்திரிகை நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தூண்டிய விவகாரத்தை ஆட்சி அதிகாரத்தால் இன்றைக்கு மறைக்கலாம். ஆனால் அது விசுவரூபம் எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறோம்.

ஒரே ஒரு உண்மையை ராஜேந்திர பாலாஜி ஒப்புக் கொண்டதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், 'திரைக் கடலோடியும் திரவியம் தேடும் உன்னத முதல்வர்' என்று சொல்லி இருக்கிறார். உண்மைதான், திரைக் கடலோடியும் திரவியம் தேடுவது மட்டும்தான் எடப்பாடியின் ஒரே வேலை. அந்த உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்