ADVERTISEMENT

திருமணம் எனும் பெயரில் நூதன மோசடி! கண்ணீருடன் காவல்நிலையத்தில் இளம்பெண்! 

06:02 PM Jun 22, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவில்பட்டியைச் சேர்ந்த மித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தையை இழந்த இவர் தனது தாயுடன் வசித்துவருகிறார். இவர்கள் வேலைக்காக சென்னையில் வசித்துவந்துள்ளனர். அப்போது, மித்ரா தனது பக்கத்து வீட்டில் வசித்துவந்த அஜித் எனும் இளைஞரைக் காதலித்துள்ளார். இதனை அவர், தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அஜித்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் மித்ராவின் தாய் முதலில் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, மித்ரா சமாதானம் செய்யவே அவர்கள் திருமணத்திற்கு அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி அவர்களது திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் அஜித் மது அருந்துவதைத் தொடர்ந்ததால், அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவகாரத்து நடந்து மித்ரா மீண்டும் தனது தாயுடன் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில், மித்ராவின் தாய் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க திருமணம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ஒரு நபர் சித்ராவுக்கு போன் செய்து, திருமண இணையதளத்தில் மித்ராவை பார்த்ததாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் மித்ரா, தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், தனது தாயின் கட்டாயத்திற்காக அதில் பதிவேற்றியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும், விடாப்பிடியாக அந்த நபர், தானும் விவாகரத்து ஆனவர்தான் என்றும், சிறிது காலம் பழகி பார்க்கலாம் அதன்பிறகு ஒத்துவந்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்படி இருவரும் செல்போனில் பேசி பழகிவந்துள்ளனர். இந்நிலையில், ஒரு நாள் திடீரென அந்த நபர் மித்ராவின் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு வருவதாக தெரிவித்திருக்கிறார். அதன்படி கடந்த 19ம் தேதி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் அந்த நபரை சந்திக்க மித்ரா, தனது இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றுள்ளார். காலை நேரத்தில் அங்கு வந்த அந்த நபர், மித்ராவிடம் பசிக்கிறது ஏதாவது பெரிய உணவகத்திற்குப் போகலாம் என்று சொல்லிக் கேட்டுள்ளார். மித்ராவும் அருகிலிருந்த பெரிய உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு திடீரென அந்த நபர், தன் பையிலிருந்து ஒரு செயினை எடுத்து மித்ராவின் கழுத்தில் போட்டுவிட்டுள்ளார். மேலும், மித்ரா கழுத்திலிருந்த பழைய செயின் இந்த புதிய செயினின் அழகை கெடுப்பதாகவும், அந்தப் பழைய செயினை தன்னிடம் தந்தால் தான் அதனை போட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி மித்ராவும் அந்த செயினை அவரிடம் கொடுத்துள்ளார். மேலும், ஒரு கவரை மித்ராவிடம் கொடுத்து அதில் ரூ. 3 இலட்சம் இருப்பதாகவும் அதனை இன்றைய செலவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். பின் அங்கு இருந்து இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது, அந்த நபர் மித்ராவிடம் கொஞ்ச தூரம் பைக்கில் போவோம் என்று சொல்லியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மித்ராவின் கைப்பை, அவரின் கைப்பேசி, அந்த நபரின் கைப்பேசி உள்ளிட்டவற்றை மித்ராவின் கைப்பையை இருக்கையின் கீழ் இருக்கும் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு, பைக்கை அவர் எடுத்துள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு அந்த நபர், “பைக் சூப்பரா இருக்கு. நான் இது வர வீலிங் பண்ணினது இல்லை. ஒரு முறை வீலிங் பண்றேன்” என்று கேட்டுள்ளார். அதனால் மித்ராவும் பைக்கிலிருந்து கீழே இறங்கி நிற்க அந்த நபர் பைக்குடன் அங்கிருந்து தப்பித்துள்ளார். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மித்ரா அங்கிருந்த ஒரு முதியவரின் உதவியுடன் சொந்த ஊருக்கு வந்து நடந்ததை தன் தாயிடம் கூறியுள்ளார்.


அதன்பிறகு மித்ராவும், அவரது தாயும் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், தனது 3 பவுன் தங்கச் செயின், செல்போன், பைக் எல்லாவற்றையும் திருடிக் கொண்டு சென்றுவிட்டார். அவரைப் பார்த்தால் அடையாளம் காட்டமுடியும். நான் இழந்த ரூ.1,25,200 மதிப்புள்ள பொருட்களை எல்லாம் கண்டுபிடித்து மீட்டுத் தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரை ஏற்ற சாத்தூர் தாலுகா காவல்துறையினர், அடையாளம் தெரியாத அந்த நபர் மீது பிரிவு 406 (நம்பிக்கை மோசடி செய்தல்) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT