ADVERTISEMENT

ரஜினி மன்ற நிர்வாகியின் புதுமைப்படுத்தல் – ஆச்சர்யமான அரசியல் கட்சியினர்!

01:56 PM Sep 06, 2018 | raja@nakkheeran.in




வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது நெரிஞ்சந்தாங்கல் கிராமம். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இந்த கிராமத்தில் வாழும் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த ஊரில் அரசின் ஒரு ஆரம்பப்பள்ளி உள்ளது. 40க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படிக்கும் இந்த பள்ளி பராமரிப்பின்றி காணப்பட்டதால், இந்த பள்ளியை பார்த்து பெரும்பாலான மக்கள் பயந்து தங்களது பிள்ளைகளை வேறு வழியில்லாமல் தங்களது சக்திக்கு மீறி தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்கவைத்து வருகின்றனர்.

இதுப்பற்றிய தகவல் அறிந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி, அப்பள்ளியை தத்தெடுத்து புதுப்பித்து தரும் பணியில் இறங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுச்சுவருக்கு கடந்த வாரம் வண்ணம் பூசி, சுவற்றில் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தலைவர்களுள் ஒருவரான காந்தி, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், சட்டமேதை அம்பேத்கர், கல்வி தந்தை எனப்போற்றப்படும் காமராஜர் போன்ற தேசத்தலைவர்களின் படங்களும், விவசாயமே நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை மாணவர்கள் உணரும் வகையில் விவசாயி ஏர் ஓட்டுவது, பெண்கள் நாற்று நடுவது போன்ற ஓவியம், தமிழ்மொழி ஆலமரம் போல் வளர்ச்சியடைந்துள்ளதை மாணவ – மாணவிகளுக்கு எளிமையாக விளக்கும் வகையில் ஆலமரத்தில் தமிழ் எழுத்துக்கள் பூத்துள்ளது போன்ற ஓவியம், தெருக்கூத்து கலையே தமிழகத்தின் கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் ஓவியம் போன்றவற்றை சுவற்றில் வரையவைத்தார்.

பள்ளி கட்டிடத்துக்கு புதிய வண்ணம் பூசியதோடு, பள்ளியின் விளையாட்டு திடலில் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான ஊஞ்சல், ராட்டினம் போன்றவையும், பள்ளிகளில் சரியான கழிப்பிட வசதி இல்லாததால் சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பது பள்ளி பிள்ளைகளின் வாடிக்கை, அது அசுத்தத்தை ஏற்படுத்தி சுற்று சூழலை மாசுப்படுத்தும் என்பதால் பள்ளி வளாகத்தில் நவீன கழிவறை அமைத்து தந்துள்ளார். அதோடு, பள்ளியை சுற்றி மரங்கள் நட்டு அதை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் கூண்டு அமைத்துள்ளார்.

அதோடு, பள்ளி மைதானத்தில் மாணவ – மாணவிகளிடம் யோகவை வலிறுத்தும் வாசகங்கள் கொண்ட தட்டிகள், நீர் மேலாண்மை குறித்து தட்டி போன்றவற்றையும் வைத்து மாடர்ன் பள்ளியாக மாற்றியிருந்தார் ரவி. சுமார் 3 லட்ச ரூபாய் செலவில் புதுமைப்படுத்தப்பட்ட அப்பள்ளியை இன்று செப்டம்பர் 6ந்தேதி பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற மாவட்ட – ஒன்றிய அளவிலான நிர்வாகிகள், அதிமுகவினர், பாமகவினர் என பல கட்சியினரும், அக்கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

நிகழ்ச்சியின் இடையே, 4 ஆம் வகுப்பு மாணவி மதுமிதா, 3 ஆம் வகுப்பு சந்தியா, 5 ஆம் வகுப்பு மாணவி மனிஷா இருவரும் காந்தி மற்றும் காமராஜர் குறித்து ஆங்கிலத்தில் வாழ்க்கை குறிப்பை மனப்பாடமாக பேசினர். காமராஜார் பற்றியும், காந்தியை பற்றி 4 ஆம் வகுப்பு மனோஜ், 4 ஆம் வகுப்பு நித்திஷ்குமார் இருவரும் தமிழில் பேசி அங்கிருந்த பொதுமக்களின் கைதட்டல்களை பெற்றனர்.

இதுக்குறித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த போளிப்பாக்கம், பிள்ளையார்குப்பம் அய்யந்தாங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவிகளின் பேச்சுப்போட்டி ஆங்கிலத்தில் முதலில் பேசச்சொன்னதற்கு காரணம், தனியார் பள்ளிகளுக்கு எந்த வகையிலும் அரசுப்பள்ளி சளைத்ததல்ல என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவே ஆங்கிலத்தில் பேசவைத்தோம். அரசு பள்ளியை பெற்றோர்கள் புறக்கணித்தால் நாளை பணம்மில்லாதவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றவர்கள், எங்கள் பள்ளியையும் ரஜினி மக்கள் மன்ற மா.செ ரவி புதுமைப்படுத்தி தரவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தனர்.

இறுதியில் பேசிய ரஜினி மக்கள் மன்ற மா.செ சோளிங்கர் ரவி, நாட்டில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு களத்தில் இறங்கியுள்ளார் தலைவர் ரஜினிகாந்த். அவர் எங்களிடம், நேர்மையான அரசியல், அனைத்து கட்சியினருடன் தோழமை, படிக்க முடியாத பிள்ளைகளை படிக்க வைத்தல், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு அதிக அக்கறை எடுத்துக்கொள்ள சொல்லியுள்ளார். அதன்படி, பள்ளி மாணவ – மாணவிகளிடமிருந்து மாற்றத்தை துவங்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளியைப்போல் அரசு பள்ளியை உயர்த்த வேண்டும் என்பதற்காக நான் பிறந்த ஊர் பள்ளியை முதல்கட்டமாக புதுமைப்படுத்தியுள்ளோம். இந்த பள்ளிக்கு இன்னும் தேவையான அனைத்து வசதிகளும் என்னால் முடிந்த அளவுக்கு செய்துதரப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் பலரும் வருகை தந்தது மற்ற அரசியல் கட்சியினரை ஆச்சர்யத்தோடு பார்க்க வைத்தது. முக்கிய கட்சி நிர்வாகி ஒருவர் நம்மிடம், மக்களை நினைச்சா ஆச்சர்யமா இருக்குங்க, நாங்கயெல்லாம் காசுக்கொடுத்து தான் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கறோம், ரஜினி பெயரை சொன்னதும் ஆளுங்க வந்து விழாவில் கலந்துக்குறோம், ரஜினி கட்சி ஆரம்பிச்சி ரவுண்ட்ஸ் வந்தா நாங்க எதிர்த்து நிறைய போராட வேண்டியிருக்கும் போல என புலம்பினார்.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT