ADVERTISEMENT

ஊசி உடைந்து உடலில் சிக்கிய பரிதாபம்...சிகிச்சை பெற சென்றவருக்கு நடந்த கொடுமை!

05:00 PM Nov 26, 2019 | Anonymous (not verified)

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டைஃபாய்ட் காய்ச்சலுக்காக சுகிச்சைக்கு சென்ற தம்பிதுரை என்பவருக்கு ஊசி போட்ட போது, ஊசியின் முனை பகுதி உடைந்து 7 மிமீ அளவிற்கு இடுப்பு பகுதி எலும்பிற்குள் சிக்கி உள்ளது. நியாயம் கேட்க சென்றவருக்கு மருத்துவமனை நிர்வாகம் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் கூறும் தம்பிதுரைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை (26). கடந்த மாதம் 22 ஆம் தேதி காய்ச்சலுக்காக குனியமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது, டைஃப்பாய்ட் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக தம்பிதுரைக்கு செவிலியர் ஒருவர் ஊசி போட்டுள்ளார்.

அப்போது ஊசியின் முனைப்பகுதி இடுப்பு பகுதியில் உடைந்து விட்டது. இதனை கவனித்த தம்பிதுரை, ஊசி போட்ட செவிலியரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அந்த செவிலியர், அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றிருக்கிறார். வீட்டிற்கு சென்ற தம்பிதுரைக்கு இடுப்பு பகுதியில் அதிகமாக வலி ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்ற தம்பிதுரை, இது குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அங்குள்ள மருத்துவர்கள் சரியாக பதில் அளிக்காமல் வேறு ஏதாவது பெரிய மருத்துவமனைக்கு சென்று பார்த்துக்கொள்ளுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து தம்பிதுரை, எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது, ஊசி போட்ட இடுப்பு பகுதியில், 7 மில்லி மீட்டர் அளவிற்கு ஊசியின் முனைப்பகுதி உடைந்து உள்ளே எலும்பு பகுதியில் சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து மீண்டும் அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று கேட்ட போது, மருத்துவர்கள் சரியான பதில் கூறாமல் மிரட்டல் விடுத்து துரத்திவிட்டதாக புகார் கூறுகிறார் தம்பிதுரை. தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தம்பிதுரைக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT