சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வசூலித்துக்கொண்டு சிகிச்சை அளித்ததாக தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisment

சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நாள்தோறும் 6000- க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சேலம் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை நோயாளிகளும் வந்து செல்கின்றனர்.

salem district government hospital two employees suspend

சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அதேவேளையில், போதிய செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் நியமிக்கப்படாததால், மருத்துவ சேவைகளை வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதற்காக மருத்துவமனை பணியாளர் பிரிவில் நிலவும் காலியிடங்களை நிரப்ப, பத்மாவதி என்ற நிறுவனத்தின் மூலம் பாதுகாவலர்கள், வார்டு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் துப்புரவு மற்றும் பாதுகாவல் பணிக்கு மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், சிலர் மருத்துவர்கள், செவிலியர்களைப்போல் நோயாளிகளுக்கு வென்பிளான் ஏற்றுவது, கட்டு கட்டுவது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர்.

இவர்களில் சிலர், ஏழை நோயாளிகளிடம் பணம் வசூலித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு பத்மாவதி நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஒப்பந்தப் பணியாளர்களான பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் (27), சேலம் குகையைச் சேர்ந்த நடராஜ் (34) ஆகிய இருவரும் நோயாளிகளிடம் பணம் வசூலித்துக்கொண்டு சிகிச்சை குளுக்கோஸ் ஏற்றும் காட்சிகள் அடங்கிய காணொலிப்பதிவு ஒன்று, சமூக ஊடகங்களில் பரவியது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் விசாரணை நடத்தியதில், மேற்சொன்ன இருவர் மீதான புகாரும் உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் உடனடியாக செவ்வாய்க்கிழமை (பிப். 11) பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.