ADVERTISEMENT

தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி தகவல் அளிக்கவில்லை : சிக்கலில் பாரதிதாசன் பல்கலைக்கழகம்

03:28 PM Jun 29, 2018 | Anonymous (not verified)

தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி தகவல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டால், மாநிலத் தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீடு சிக்கல் ஏற்பட்டு தவிக்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

ADVERTISEMENT

ஒரு பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முதல்வர் பணிக்கு நியமிக்கப்படும் பேராசிரியர்களின் கல்வித் தகுதியைச் சரிபார்த்து, முதல்வராகப் பணியாற்றிடக் கல்வி மற்றும் பிற தகுதிகளைப் பெற்றிருக்கிறார் என்று ஏற்பு வழங்கும் என்பது வழக்கான ஒன்று. பல்கலைக்கழகம் ஏற்பு கொடுக்கவில்லை என்றால் கல்லூரியில் முதல்வர் பணியைத் தொடர முடியாது.

ADVERTISEMENT

இந்நிலையில், திருச்சி பொன்மலையை அடுத்த கீழ கல்கண்டார் கோட்டையைச் சார்ந்தவர் செல்வக்குமார். இவர் மறுமலர்ச்சி திமுகவின் கிளைச் செயலராக உள்ளார். இவர் திருச்சியில் சிறுபான்மையினர் உரிமை பெற்று அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் நியமனம் செய்யப்பட்ட முதல்வர் பணிக்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் கல்வித் தகுதி (Qualification Approval) வழங்கியுள்ளதா? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் கேட்டு 14.05.2018ஆம் நாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தகவல் வழங்கும் அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் இந்த கடிதம் 15.05.2018ஆம் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மடல் பெற்ற 30 நாட்களுக்குள் பதில் வழங்கவேண்டும் என்று விதியுள்ளது. அதன்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தகவல் வழங்கும் அலுவலர் 15.06.2018க்குள் தகவல் வழங்கியிருக்கவேண்டும். பல்கலைக்கழகம் தகவல் வழங்கவில்லை. 30 நாள்கள் கடந்தும் தகவல் வழங்கப்படவில்லை என்று செல்வக்குமார் தகவல் அறியும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு அலுவலர் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு 19.06.2018ஆம் நாளிட்ட கடிதம் வழி மேல்முறையீடு செய்கிறார்.



இந்த கடிதம் பல்கலைக்கழகம் 20.06.2018ஆம் பெற்றுள்ளது. ஒருவாரம் அதாவது 27.06.2018ஆம் நாள் வரை மேல்முறையீட்டின் அடிப்படையிலும் பல்கலைக்கழகம் கல்லூரி முதல்வருக்குக் கல்வித் தகுதி ஏற்பு வழங்கப்பட்ட தகவலைத் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, செல்வக்குமார் 27.06.2018ஆம் நாளிட்ட கடிதம் மூலம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் நான் கேட்ட தகவலை வழங்காமல் உள்ளது என்றும் பதிவாளருக்கு மேல்முறையீடு செய்தும் தகவல் வழங்கப்படாத நிலையே நீடித்து வருகின்றது என்றும் இது 30 நாள்களுக்குள் தகவல் வழங்கப்படவேண்டும் என்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறிய செயலாக உள்ளது என்று சென்னையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையருக்குப் புகார் செய்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் வழங்குவோம் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகம் தன்னுடைய இணையத் தளத்தில் இதற்காக இணையப் பக்கத்தையும் அமைத்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் அரசு சார்ந்த ஒரு பல்கலைக்கழகம் என்பதால் தகவல் வழங்காமல் இருப்பது என்பதே ஏதோ ஒரு பிரச்சனையை மறைக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. ஒரு நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையைச் சராசரி குடிமகனும் அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். அந்தச் சட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடந்துகொள்ள வேண்டும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கல்லூரி சார்ந்த தகவலை வழங்காமல் இருப்பதன் மூலம் அந்தக் கல்லூரிக்குப் பல்கலைக்கழகம் ஆதரவு நிலை எடுத்துள்ளதோ என்ற சந்தேகம் கல்வியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

மாநிலத் தகவல் ஆணையம் செல்வக்குமாரின் இந்தப் புகாரை வழக்கு எண் இட்டு (Case Number) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கும். விசாரணையில் பல்கலைக்கழகத்தின் பதில் மாநில ஆணையத்திற்கு திருப்தி அளிக்கிவில்லை என்றால் ரூ.25,000/- அபராதத் தொகை கட்டவேண்டும் என்று தீர்ப்பு வழங்கவும் வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சார்ந்த சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தகவல் வழங்கித் தப்பித்துக் கொள்ளப்போகிறதா? சட்டத்தை மதிக்கவில்லை என்று 25,000ரூபாய் அபராதம் செலுத்தப் போகிறதா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். அல்லது இந்த விஷயத்தில் மாநில தகவல் ஆணையமும் என்ன செய்ய போகிறது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமானிய ஒருவரின் அடிப்படையான தகவல் பெறும் உரிமை சட்டத்தையே இப்படி மூடுமந்தமாக காட்டுவது தான் தற்போதைய நிலை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT