ADVERTISEMENT

'வேலைநிறுத்தத்தில் பங்கேற்கமாட்டோம்'- ஐஎன்டியூசி அறிவிப்பு

09:44 PM Jan 08, 2024 | kalaimohan

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் இன்று இரவு 12 மணி முதல் படிப்படியாக பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 19,000 பேருந்துகள் இயக்கப்படும். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்கள் செயல்படும். பொங்கல் முடிந்து ஊருக்கு வருவோருக்கு ஜனவரி 16 முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தர்மபுரம், கோயம்பேடு, கிளம்பாக்கம் உள்ளிட்ட 11 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும். அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சுமுகமாக இயக்க நடவடிக்கை எடுக்கும். எதை செய்ய முடியும்; எதை செய்வது சிரமம் என்பதை தொழிற்சங்கங்களுக்கு சொல்லியிருக்கிறோம்.

ADVERTISEMENT

கடந்த அதிமுக ஆட்சியில் அவர்களால் செய்ய முடியாததை இப்போது அதிமுக தொழிற்சங்கங்கள் செய்ய சொல்வதும், எடப்பாடி பழனிசாமி சொல்வதும் வேடிக்கையான ஒன்று, விந்தையான ஒன்று. நாங்கள் செய்ய முடியாது என்று சொல்லவில்லை. நிதிநிலை சீரான பிறகுதான் செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறோம். அவர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதற்காகத்தான். அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேர்தல் வருகின்ற நேரத்தில் இதை செய்தால் மக்களுக்கு கோபம் வரும் என்ற எண்ணத்தில் செய்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் இதை அறிவார்கள். அவர்களை இடைஞ்சல் செய்வோர் மீதுதான் அவர்களுக்கு கோபம் வரும்'' என்றார்.

அதேநேரம் சென்னையில் திருவான்மியூர் பணிமனையில் பேருந்து நிறுத்தம் தொடங்கியதாக பெயர்ப்பலகையில் அறிவிக்கப்பட்டு பல இடங்களில் பேருந்து நிறுத்தம் அமலாகி வருகிறது. மறுபுறம் அதிமுகவின் அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க தொ.மு.சவினர் பேருந்துகளை வழக்கம் போல இயக்க வேண்டும் என தொ.மு.ச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக திமுக அரசு தீர்த்து வருகிறது. மற்ற பிரச்சனைகளை அரசு தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டும். முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அதிமுக தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க தொ.மு.ச துணை நிற்கும்' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போக்குவரத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஐஎன்டியூசி பங்கேற்காது என அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நலன் கருதி ஐஎன்டியூசி போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அண்ணா தொழிற்சங்க பேரவை சூழ்ச்சி ஏற்படுத்துவதற்காக போராட்டத்தில் இறங்கியுள்ளது. பொங்கல் முடிந்த பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சர் கூறியதை ஏற்காமல் அண்ணா தொழிற்சங்க பேரவை போராட்ட சுவரொட்டிகளை ஒட்டி உள்ளது” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT