ADVERTISEMENT

சுயேச்சை வேட்பாளர் தரையில் அமர்ந்து போராட்டம்! பாமகவுக்கு கண்டனம்!!

08:45 AM Mar 28, 2019 | elayaraja

சேலத்தில் வேட்புமனுவுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களை வாங்க மறுத்து திட்டமிட்டே மனுவை நிராகரித்துவிட்டதாகக் கூறி, சுயேச்சை வேட்பாளர் திடீரென்று ஆட்சியர் அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி, வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, கடந்த 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

ADVERTISEMENT

சேலம் தொகுதியில், திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சைகள் உள்பட 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். புதன்கிழமை (மார்ச் 27, 2019), தேர்தல் பார்வையாளர் ரமேஷ் மன்ஜூர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி ரோகிணி வேட்புமனுக்களை பரிசீலனை செய்தார்.

இதில், வேட்பாளர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக), கே.ஆர்.எஸ்.சரவணன் (அதிமுக), எஸ்.கே.செல்வம் (அமமுக), பிரபு மணிகண்டன் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 25 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேநேரம், சொத்துப்பட்டியல் விவரங்களை தெரிவிக்கும் படிவம் - 26ஐ சரியாக பூர்த்தி செய்யாதது, முன்மொழிபவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாதது, தவறான வரிசை எண் உள்ளிட்ட காரணங்களால் 25 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாதவர்கள், வேட்புமனுக்களை வியாழக்கிழமையன்று (மார்ச் 28) திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதனால், இன்று மாலை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தெரிய வரும்.

இது ஒருபுறம் இருக்க, வேட்புனுவை திட்டமிட்டு நிரகரிக்கப்பட்டதாகக் கூறி பாமகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி குமார் என்பவர் திடீரென்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

வேட்புமனுவுடன் வங்கி கணக்குப்புத்தகத்தின் நகல், ஒரு புகைப்படம் இணைக்க வேண்டும். அவை இணைக்கப்படாததால், வேட்புமனு பரிசீலனை தொடங்கப்படுவதற்கு முன்னதாக அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவர், மேற்சொன்ன ஆவணங்களை எடுத்துக்கொண்டு 12 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அதனால் அவரை, உள்ளே செல்ல விடாமல் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு அவர் தரையில் அமர்ந்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து குமார் கூறுகையில், ''பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திமுக, அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னார். குறிப்பாக, அதிமுகவை பற்றி கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது பிடிக்காததால் நான் பாமகவில் இருந்து விலகி, சேலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தேன்.

என்னுடைய புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை இணைக்காததால் அவற்றை எடுத்து வந்தேன். ஆனால் நேரம் முடிந்துவிட்டது எனக்கூறி, எனது வேட்புமனுவை நிராகரித்து விட்டனர். எனது வெற்றிவாய்ப்பை பறிக்க வேண்டும் என்று திட்டமிட்டே இப்படி செய்துவிட்டனர்,'' என்றார்.

பின்னர் அவரை காவல்துறையினர் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT