ADVERTISEMENT

அமாவாசை திருடனின் தீபாவளி திருட்டு! -சிசிடிவி பதிவை வைத்து தேடும் காவல்துறை!

07:09 PM Nov 15, 2020 | kalaimohan

ADVERTISEMENT

அமாவாசை நாளில் தீபாவளி வருவதால், திருடுவதற்கு ஏற்ற நாளென, காரியத்தில் இறங்கி, கிடைத்ததைச் சுருட்டிவிடுவார்களாம், பலே திருடர்கள்.

ADVERTISEMENT

விருதுநகரிலும், ரெடிமேட் கடை ஒன்றில், மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி, அப்படி ஒரு திருட்டுச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றான் ஒரு திருடன். பேண்ட், சட்டைகள் மற்றும் கல்லாவில் இருந்த பணத்தை அவன் திருடிய காட்சி, அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது.

விருதுநகர் மீனாம்பிகை பங்களா பஸ்-ஸ்டாப்பில் உள்ள ‘நியூ பெஸ்ட் மென்ஸ் வேர்’ ரெடிமேட் கடையில், பணம் மற்றும் உடைகளைத் திருடியவன், இளைஞன் கிடையாது. வேட்டி உடுத்தியிருக்கும் அந்த முதியவர் தலையில் தொப்பியுடன், வாயில் டார்ச்சை கவ்வியபடிதான் உள்ளே இறங்குகிறார். சிசிடிவி கேமராவை, கடையில் இருந்த டீ-ஷர்ட்டால் மூட, பெரிய போராட்டமே நடத்துகிறார். அது முடியாமல் போக, தன் முகத்தை கர்ச்சீப் போன்ற துணியால் கட்டிக்கொண்டு, சுறுசுறுப்பாகத் திருடுகிறார்.

ரெடிமேட் கடையின் உரிமையாளர் அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில், விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நூற்றுக்கும் மேற்பட்ட பேண்ட்டுகள், சட்டைகள், ரொக்கம் ரூ.10000 திருடு போனது தெரியவந்துள்ளது.

பிரிக்கப்பட்ட மேற்கூரை வழியாகவே, திருடப்பட்ட பொருட்களுடன் திருடன் திரும்பிச் சென்றதால், இந்தத் திருட்டில் அவனுக்கு உடந்தையாக, இன்னொரு திருடனும் இருந்திருக்கக்கூடும் என்ற கோணத்தில், காவல்துறையினர் விசாரித்து, திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT