ADVERTISEMENT

அடைக்கலம் கேட்டுவந்த இளம்பெண்ணிடம் தகாதவாறு நடந்துகொண்ட பெண் ஆய்வாளர்!! தஞ்சையில் பரபரப்பு

05:09 PM Apr 24, 2020 | kalaimohan

ஆறு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு வந்தவர்களை காவல்துறை ஆய்வாளரே தாக்கி, தாலியை கழற்றி வீசிய சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

ADVERTISEMENT


தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள அணைக்கரை விநாயகன் தெருவை சேர்ந்தவர் நடராஜன் அவரது மகள் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அரியலூர் மாவட்டம் வடவாற்று பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருப்பனந்தாளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாகவே படிக்கும்போது ஆறு ஆண்டுகளாக காதலித்திருக்கின்றனர். பிரபு கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

ADVERTISEMENT


இந்தநிலையில் கரோனா ஊரடங்கு விவகாரத்தால் திருப்பூரில் இருந்த பிரபு வீட்டிற்கு வந்தார், அவரை சந்தித்த அனிதா, எனக்கு எங்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்யுறாங்க, என்னை உடனே எங்காவது கூட்டிக்கொண்டு போய்விடு என கூற, பிரபுவும் அனிதாவும் கடந்த 19 ம் தேதி அணைக்கரை விள்ளியாண்டவர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது பெற்றோர்களும் திருமணத்தை ஏற்க மறுத்து, எதிர்ப்பு தெரிவித்துவிட்டனர். இதையடுத்து கடந்த 21ம்தேதி இரவு காதல் தம்பதிகள் இருவரும் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்டுள்ளனர். அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் கவிதாவும், பெண் காவலரான ஜெயப்பிரியாவும் அனிதா மற்றும் பிரபுவை சமூக பெயரைக்கூறி திட்டியதோடு காலணி காலோடு எட்டி மிதித்து, ஆவேசத்தில் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை கழற்ற செல்லியுள்ளனர், அந்த பெண் மறுக்க, ஆய்வாளரே தாலியை கழட்டி வீசிவிட்டு, அந்த பெண்ணை அவரது பெற்றோர்களோடும், அந்த பையனை அடித்து விரட்டியும் விட்டுள்ளனர்.



இந்த தகவல் திருப்பனந்தாள் பகுதியில் உள்ள நீல புலிகள் இயக்கத் தலைவர் புரட்சிமணியின் காதுக்கு எட்ட, அவர் திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகனிடம் கூறி முறையிட்டார். அதிர்ந்து போன டிஎஸ்பி உடனே திருப்பனந்தாள் காவல்நிலையத்திற்கு விரைந்துவந்து, நடந்தவற்றை விசாரித்துவிட்டு, ஆய்வாளர் கவிதாவை, இருவரும் மேஜர், அவர்களை பிரிக்க நீங்கள் யார், இப்போது உள்ள சூழலில் இதுபோன்ற செயல்களை செய்தால் என்ன நடக்கும் என்றுகூட தெரியாதா, விடிவதற்குள் இருவரையும் நீதிபதியிடம் ஒன்றாக ஆஜர்படுத்தவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை பாயும் என வறுத்தெடுத்துவிட்டார்.

இதையடுத்து பிரித்து அனுப்பியவர்களை தேடிப்பிடித்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி வீட்டில் இருவரையும் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது அனிதா, நான் பிரபுவோடுதான் வாழ்வேன் என கூறியதால் அவரை கணவருடன் அனுப்பி வைத்துவிட்டனர்.

இதற்கிடையில் தனது மனைவியையும், தன்னையும் சமூக பெயரை சொல்லி தாக்கிய திருப்பனந்தாள் பெண்காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் ஜெயப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT