ADVERTISEMENT

சேலம்: கொலை முயற்சி, வழிப்பறி ரவுடிக்கு குண்டாஸ்!

11:42 PM Jun 03, 2020 | kalaimohan



சேலத்தில், கொலை முயற்சி, வழிப்பறி குற்றங்களில் தொடர்புடைய ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


சேலம் சித்தனூரை சேர்ந்தவர் மாலிக் பாஷா. இவர் கடந்த மே 15ம் தேதி, ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள ஜீவா சிலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், 2800 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழிப்பறி செய்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். மாலிக் பாஷா கூச்சல் போட்டதால் அவரை கை, கால்களில் கத்தியால் கிழித்து காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மாலிக்கிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர், ஜாகீர் அம்மாபாளையம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜா மகன் சரவணன் என்கிற சரவணராஜா (35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், சேலம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.


இவர் மீது ஏற்கனவே, கடந்த 2019ம் ஆண்டு பிப். 8ம் தேதியன்று, சுப்ரமணிய நகரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரை முன்விரோதத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கு, 31.5.2015ம் தேதி ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த மதியழகன் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதில் அவர் தராமல் போகவே, அவரை காதில் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்திய வழக்கிலும் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு வழக்கிலும் கைது ஆகி சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தபிறகு மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.

பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததோடு, தொடர்ந்து குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி, ரவுடி சரவணன் என்கிற சரவணராஜாவை காவல்துறையினர் செவ்வாயன்று (ஜூன் 2) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கைது ஆணை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரவணனிடம் புதன்கிழமை நேரில் சார்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT