ADVERTISEMENT

கூடுதல் வட்டி... கவர்ச்சித் திட்டங்கள்... 30 கோடி சுருட்டியவருக்கு சிறை! - பரிதாபத்தில் வாடிக்கையாளர்கள்!

10:40 PM Nov 02, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

'முறை தவறி பயணிக்கும், கவர்ச்சி அறிவிப்புகளை நம்பி மோசம் போகாதீர்கள்' என்று அரசும் காவல் துறையும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டாலும், பண ஆசையில் பிரகாச விளக்கில் விழுந்து மடியும் விட்டில் பூச்சிகளைப் போன்று மக்கள் ஏமாறுவது சகஜமாகி விட்டது. இதில் வேதனை என்னவெனில் பாமர மக்களைவிட படித்த மக்களே தங்களின் சேமிப்பை வீணாகத் தொலைத்து விட்டுக் கண்ணீரும் கம்பலையுமாக அலைவதுதான் பரிதாபம்.

நெல்லை ஜங்ஷன் பக்கமுள்ள பாலபாக்யா நகரைச் சேர்ந்த எடிசன், வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவரைப் போன்றே தென்காசி நகரின் குத்துக்கல் வலசையைச் சேர்ந்த மயில்வாகனனும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக நட்பு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகட்டு முன்பு மயில்வாகனன் நிதி நிறுவனம் ஆரம்பித்தவர், தனது நிதி நிறுவனம் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் அல்லது அதிக வட்டி தருவதாக அறிவித்தவர், ஆடித் தள்ளுபடி போன்று கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தார் ஒரு லட்சம் டெபாசிட் செய்பவர்களுக்கு மாதம் தோறும் 8 ஆயிரம் வட்டி தரப்படும். வாடிக்கையாளர்கள் தங்களின் டெப்பாசிட் தொகையை எப்போது திரும்பப் பெறவேண்டும் என்று விரும்புகிறார்களோ, உடனே அணுகினால் இரண்டே நாளில் டெப்பாசிட் வாபஸ் என அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே வைத்துக் கொண்டார். இந்த நிதி நிதிநிறுவனத்தின் தலைமையத்தை, நெல்லை மற்றும் தென்காசியில் வைத்துக் கொண்டவர், வேறு சில மாவட்டங்களிலும் ஆரம்பித்தார். இந்தப் பகட்டான கவர்ச்சியான பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தை நம்பி பலர் விட்டில் பூச்சிகள் போன்று மொய்த்தனர்.

ஒய்வு பெற்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், தனியார் நிறுவன மேலாளர்கள் மட்டுமல்லாமல் தொழிலதிபர்கள் கூட முந்திக் கொண்டு அடைமழையாய், லட்சம் முதல் கோடிகள் வரை டெபாசிட் செய்துள்ளனர். நல்ல பிள்ளை மாதிரி, டெபாசிட்தாரர்களுக்கு மாதம் தோறும் வட்டிப் பணத்தை வழங்கிவந்திருக்கிறார் மயில்வாகனன். இதனையறிந்த எடிசனும் தனது மற்றும் தனது உறவினர்கள் நண்பர்களிடமிருந்து சேகரித்த சுமார் 10 கோடி ரூபாய் வரை மயில்வாகனன் நிறுவனத்தில் கடந்த வருடம் டெபாசிட் செய்திருக்கிறார். அதற்குரிய வட்டிப் பணம் இரண்டு மாதம் மட்டுமே அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதன்பின், அவர்களுக்குப் பல மாதங்களாகவே வட்டிப் பணம் கிடைக்கவில்லையாம். இதனால் 150 வடிக்கையாளர்கள் கேட்டதற்கு சாக்குப் போக்கு சொல்லிக் கழித்திருக்கிறார் மயில்வாகனன்.

ஒருவர் டெபாசிட் பணத்தை அடுத்தவருக்கு வட்டியாகக் கொடுத்தது மாதிரி என்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் கொடுக்க முடியாமல் போயிருக்கிறது. பணம்கிடைக்காமல் மனமுடைந்த எடிசன் இது குறித்து நெல்லை கமிஷ்னர் தீபக் எம்.தாமோதரிடம் புகார் கொடுத்தார். அவரது அறிவுரையின்படி நெல்லை குற்றப்பிரிவு உதவி கமிஷ்னர் ராஜூ, இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி நிதி நிறுவனம் நடத்திய மயில்வாகனன் மற்றும் உடந்தையான அவரது தாய் உமா பார்வதி, உறவினர் சிவசுந்தர் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று மயில்வாகனனைப் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகினர்.


இது குறித்துப் பல புகார்கள் வருகின்றன, விசாரணை நடத்துப்படுகிறது என்றார் மாநகர துணை கமிஷ்னர் சரவணன். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல போலீசார்களும் டெபாசிட் செய்துள்ளதாகவும் அவைகள் உறவினர்களின் பெயரில் டெபாசிட் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களின் காட்டில் ஐப்பசி அடைமழை தான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT