/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_147.jpg)
சூளகிரி அருகே, கடன் தொகையைத்திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பண்ணப்பள்ளியைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருடைய மகன் திம்மராஜ் (26). விவசாயி.இவருக்கும், உள்ளூரைச் சேர்ந்த பெத்ததிம்மராயப்பா மகன் திருமலேஷ்(21), பஜ்ஜேகவுடா மகன் கிஷோர்(19) மற்றும் 17 வயது சிறுவன்ஆகியோருக்கும் இடையே கொடுக்கல்வாங்கல் தகராறு இருந்தது. இவர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதால், அவசரத் தேவைக்கு அடிக்கடி பணம் கைமாற்று வாங்குவதும், திருப்பிக் கொடுப்பதும் சகஜமாகஇருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமலேஷிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்த திம்மராஜ், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். பணத்தைக் கேட்டுச் செல்லும்போதெல்லாம் திருமலேஷை அவர் அவமானப்படுத்தி அனுப்பியுள்ளார். செப். 28 ஆம் தேதி அவர்கள் நான்குபேரும் அப்பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது திருமலேஷ், திம்மராஜிடம் பணத்தைத் திருப்பித் தரும்படி கூறியுள்ளார். குடிபோதையில் இருந்த திம்மராஜ் அவரை ஆபாசமாகத் திட்டியுள்ளார்.
ஆத்திரம் அடைந்த திருமலேஷ், கூட்டாளிகளுடன் சேர்ந்து திம்மராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். தலை துண்டிக்கப்பட்டநிலையில் திம்மராஜ் நிகழ்விடத்திலேயே பலியானார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து பேரிகை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம்உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளான சிறுவன் உள்பட மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடனைத் திருப்பித் தராததால் வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)