ADVERTISEMENT

திருமணம் ஆன ஒரே வருடத்தில் இளம்பெண் உயிரிழப்பு... பெற்றோரின் புகாரால் கரூரில் பரபரப்பு!

08:07 PM Nov 23, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருமணமான ஒரே வருடத்தில் மர்மமான முறையில் இளம்பெண் இறந்துள்ளார். இது திட்டமிட்ட கொலை என்றும், வரதட்சணை கேட்டு கணவன் குடும்பத்தினரால் தங்கள் மகள் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்றும் அப்பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா தாமோதரஹள்ளி ஊராட்சி, சாதி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் வெண்ணிலா - முருகேசன் தம்பதியினர். இவர்களது மூத்த மகள் பவித்ரா (22). பவித்ராவை கரூர் மாவட்டம் வாங்கல் அருகே அக்ரஹாரம் என்ற பகுதியில் வசிக்கும் பிரகாஷ் குமார் என்ற பொறியாளருக்கு, சென்ற 14- மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். பிரகாஷ்குமார் கரூரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பவித்ராவின் பெற்றோர் வெண்ணிலா, தாமோதரஹள்ளி என்ற அந்த ஊராட்சியின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.


இவர்களின் திருமணத்தின்போதே, 40 பவுன் தங்கநகை மற்றும் சீர்வரிசைகள் செய்துள்ளனர் வெண்ணிலா முருகேசன் தம்பதிகள். இந்தநிலையில் மீண்டும், வரும் பொங்கல் திருநாளுக்கு ஒரு காரும் தங்க நகைகளும் வரதட்சணையாகக் கேட்டு, பவித்ராவை துன்புறுத்தியுள்ளார்களாம். இது தொடர்பாக, தனது பெற்றோரிடம் எடுத்துக் கூறி கதறி அழுதுள்ளார் பவித்ரா. இந்நிலையில், 22 -ஆம் தேதி மதியம், 2 மணியளவில் பவித்ரா கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து போனதாகத் தெரிகிறது.

மேலும், பவித்ராவின் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, பவித்ராவின் கணவர் குடும்பத்தார், திடீரென அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.

மேலும், அவர்கள் வசித்த வீட்டையும் பூட்டிவிட்டு ஊரை விட்டு வெளியேறி விட்டனர். பவித்ராவின் உடல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது, இது குறித்து விசாரணை மேற்கொண்டு உறவினர்களுக்கும் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தகவலின்பேரில், கிருஷ்ணகிரியில் இருந்து ஊர் மக்களுடன் திரண்டு வந்த பவித்திராவின் பெற்றோர், தனது மகள் இறப்பிற்கு நீதி வேண்டும் எனக் கோரி கரூர் -திருச்சி சாலை, காந்திகிராமம் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மேலும், பவித்ராவின் உடல் உடற்கூறு ஆய்வு செய்து, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரின் உடல், அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், இது தொடர்பாகக் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கணவர் பிரகாஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தேடி வருகின்றனர். இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT