ADVERTISEMENT

முதல்வர் வருகைக்காக பழமையான ஆலமரங்கள் வெட்டி அகற்றமா..? கொதிக்கும் இயற்கை ஆர்வலர்கள்!

09:09 PM Sep 19, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு, பல கட்ட ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு, தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று வருகிறார். இந்தச் சுற்றுப்பயணம், அரசு செலவில் ஏற்பாடாகி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எதிர்வரும் 25 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைதர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் தான், அவர் வந்து செல்லும் சாலையை மறுமராமத்து செய்யத் தொடங்கியுள்ளனர். அதேபோல அனைத்துத் துறையும் அவசரகதியில் கோப்புகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் முதல்வர் வருகைக்காக சாலை ஓரத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மரங்களை அகற்றி வருகின்றனர். விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வீரடிப்பட்டி ஊராட்சியில் உள்ள தாண்டீஸ்வரம் கிராமத்தில், சாலையின் தூரத்தில் நின்ற பழமையான 3 ஆலமரங்களை, வேகமாக வெட்டி பொக்கலின் மூலம் லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனர். இப்படி மாவட்டத்தில் எத்தனை மரங்களைக் கொன்று முதல்வரை வரவேற்கப் போகிறார்களோ என அப்பகுதி வாழ் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்..


இது குறித்து மரங்களின் மரங்களின் மீது காதல் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் கூறும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை ஓரங்களில் மரங்கள் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 2018 இல், தாக்கிய 'கஜா' புயல் அத்தனை மரங்களையும் அடியோடு சாய்த்துவிட்டது. அப்படியும் ஆங்காங்கே பழமையான மரங்கள் நிலைத்து நின்றது. சாலையோரம் இருக்கும் சாய்ந்த மரங்களை மீட்க, நெடுஞ்சாலைத்துறை மூலம் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். பல இடங்களில் பராமரிப்பின்றி கன்றுகள் கருகிப் போனது. இப்படி நிலைத்து நின்ற மரங்களையும் முதல்வர் வருகையைக் காரணம் காட்டி, வெட்டி அகற்றுவது பெரும் வேதனையாக உள்ளது. மரங்களை வளர்க்க இன்று சின்னக்குழந்தைகள் கூட முனைப்புக் காட்டும் போது வளர்ந்த மரங்களை வெட்டி அகற்றலாமா?

விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், உயிர் மரங்களை வெட்டினால் வழக்குப் பதிவு செய்து நடடிக்கை எடுக்கப்படும் என்று 'கஜா' புயல் நேரத்தில் சொன்னதோடு பலர் மீது வழக்கும் பதிய வைத்தார். ஆனால், அவரது தொகுதியிலேயே முதல்வரின் பெயரால் மரங்கள் வெட்டப்படுவது அமைச்சருக்குத் தெரியாமல் இருக்குமா என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT