admk village president incident in pudukottai

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த துணி வியாபாரியை தூக்கிச் சென்று கடைவீதியில் ஒரு கடை வாசலில் உள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்த அ.தி.மு.க-வை சேர்ந்தஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடி ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல். இவருக்கும் அதே ஊரில் தங்கி இருந்து துணி வியாபாரம் செய்யும் வெங்கடேசனுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சக்திவேல் பாட்டிலால் தாக்கியதில் வெங்கடேசுக்கு தலையில் காயம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் வெள்ளிக்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனர்.

admk village president incident in pudukottai

Advertisment

இந்த சம்பவத்தையடுத்து சனிக்கிழமை காலை சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் சுமார் 10 பேர் வெங்கடேஷ் வீட்டிற்குச் சென்று கைலியுடன் தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேஷை தாக்கி தூக்கி வந்து கடைவீதியில் காவல் நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு கடை வாசலில் பந்தலுக்காக நடப்பட்டிருந்த மரத்தில் கயிற்றால் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை அந்தப் பகுதியில் நின்ற சிலர் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

வெங்கடேஷ் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து அங்கு போலீசார் வந்த அவரது கட்டுகளை அவிழ்க்க சொன்ன பிறகு சக்திவேலின் சித்தப்பா முருகன் கட்டுகளை அவிழ்த்து விட்டுள்ளார். அதன் பிறகு வெங்கடேஷ் விடுவிக்கப்பட்டார். துணி வியாபாரியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் ஊ.ம.தலைவர் சக்திவேல் மற்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் காசிமுத்து, மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.