ADVERTISEMENT

“நானே எடுக்கிறேன் செல்பி!” -விஜய் சேதுபதியின் பாணியே தனி!

05:45 PM Feb 19, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

“நடிகர் விஜய் சேதுபதியையும் அரசியலுக்கு இழுக்காமல் விடமாட்டார்கள் போலும்.”
-பலரையும் இப்படிப் பேச வைத்திருக்கிறது சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அந்த அளவுக்கு அவர் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள்.

ADVERTISEMENT

ஏழை, எளிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தும் உயர் கல்வி கற்பதற்கு வழியில்லாத நிலை ஏற்படும்போது, அவர்களை அடையாளம் கண்டு, கல்வி கற்பதற்கு வழிகாட்டும் அமைப்புதான் சென்னை பவுன்டேசன். ஒவ்வொரு ஆண்டும் கலைநிகழ்ச்சி நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் நிதி மற்றும் திரையுலகத்தினர் அளித்துவரும் நன்கொடையை வைத்து செயல்பட்டு வருகிறது அந்த நிறுவனம். இந்த ஆண்டும் சென்னை பவுன்டேசன் சார்பில் தேனாம்பேட்டை அரங்கில் கலைநிகழ்ச்சி நடத்தினார்கள்.

லஷ்மன் ஸ்ருதி இசைக் கச்சேரியுடன் களைகட்டிய அந்த விழாவில், விளம்பரப்படுத்தப்படாத சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் விஜய் சேதுபதி. சென்னை பவுன்டேசன் தொண்டு நிறுவனத்துக்கு உதவிகரமாகத் திகழும் அனைவருக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய அவர் “இப்ப இருக்கிற சமுதாயத்துல தன் குடும்பம், தன் குழந்தைன்னு எல்லாருமே ஓடிக்கிட்டிருக்காங்க. பசிக்கு சாப்பாடு கொடுக்கிறதவிட, கைச்செலவுக்கு பணம் கொடுக்கிறதவிட, கல்வி கொடுப்பதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஏழைகளுக்கும் முன்ன பின்ன தெரியாதவங்களுக்கும், கை கொடுத்து உதவ வேண்டுமென்று கடந்த 5 ஆண்டுகளாக இலவச கல்விப் பணியைச் செய்யும் இந்த தொண்டு நிறுவனத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.” என்று சிம்பிளாக பேசினார்.

விஜய் சேதுபதி பேசி முடித்ததும், அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செய்தது லஷ்மன் ஸ்ருதி. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆண்களும், பெண்களும் ஆசை ஆசையாக விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ஒருகட்டத்தில், தன்னை மொய்த்தவர்கள் கையில் இருந்த செல்போனை வாங்கி, “நானே எடுக்கிறேன் செல்பி” என்று விஜய் சேதுபதியே செல்பி எடுத்து, ரசிகர்களின் மகிழ்ச்சியில் தானும் பங்கெடுத்துக்கொண்டார். அவர் இந்த அளவுக்கு இணக்கமாக நடந்துகொண்டது, பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்துவிட, இசை நிகழ்ச்சியைக் கவனிப்பதை விட்டுவிட்டு, ஆளாளுக்கு மேடையேறி செல்பி எடுத்துக்கொண்டனர். ஒரு கட்டத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் விஜய் சேதுபதியை கொண்டு வரவேண்டியதாயிற்று. ஆனாலும், காரில் ஏறும்வரையிலும் ரசிகர்கள் அவரை விடவில்லை. “விஜய் அண்ணா வாழ்க! மக்கள் செல்வன் வாழ்க!” என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். அப்போது ஒரு ரசிகர் “வருங்கால முதல்வர் விஜய் சேதுபதி வாழ்க!” என்று அடித்தொண்டையில் இருந்து கத்தினார். அந்த வாழ்த்தையும் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டு கிளம்பினார் விஜய் சேதுபதி.


கடந்த ஆண்டும் இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் விஜய் சேதுபதி. அப்போது “வீட்ல பசங்க தேடுவாங்க.. சீக்கிரம் போகணும்..” என்று சொல்லிவிட்டு, அப்பாவி போல கிளம்பினார். இந்த ஆண்டு நிலைமை மாறிவிட்டது. மைக் பிடித்து பேசினார். ஆளுயர மாலை போட்டார்கள். செல்பி செஷன், வாழ்த்து கோஷம் என, அரங்கமே அல்லோகலப்பட்டது. இத்தனைக்கும், இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் விஜய் சேதுபதியின் பெயரே போடவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மட்டுமே அவர் வருவதை அறிந்திருந்தார்கள். மற்றவர்களுக்கோ, விஜய் சேதுபதியின் விசிட் இன்ப அதிர்ச்சிதான்! ஆனாலும், திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்.
‘மக்கள் செல்வர்’ என்ற பட்டத்துக்கு பொருத்தமானவராகத்தான் இருக்கிறார் விஜய் சேதுபதி!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT