ADVERTISEMENT

கடைசி நேரத்தில் ஏழை விவசாயி மகளின் மருத்துவ கனவை நனவாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி...!

03:22 PM Nov 18, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் டாக்டர் கனவு என்பது கடினமாகிவிட்டது. அப்படியும் சோர்ந்து விடாமல் படித்து நீட்டில் வெற்றி பெறும் விவசாய தொழிலாளர்களின் குழந்தைகள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி நீட்டில் வெற்றி பெற்ற ஏழை விவசாயின் மகள் தான் கோபிகா. ஆனால் தகுதி பெற்றும் சான்றிதழ் குளறுபடி என்ற தடை இறுதி நேரத்தில் வந்தால் துடிதுடித்தது அந்த குடும்பம்.

அவர்களின் வேதனையை போக்கி விவசாயி மகளை மருத்துவ படிப்புக்குள் நுழைய வைத்துள்ளார் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர். அவர்தான் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தற்போது தொல்லியல் துறையின் ஆணையாளராக இருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ராயபாளையம் புதூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயி சுப்பிரமணியின் மகள் கோபிகா. பிளஸ் டூ முடித்துவிட்டு நீட் தேர்விலும் வெற்றி பெற்றார். சென்னையில் 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ள மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க தயாராகி வந்தார். சென்ற வாரத்தில் அவருடைய ஆவணங்களை எல்லாம் சரி பார்த்துக் கொண்டிருந்தபோது பிறப்பிட சான்றிதழில் தன்னுடைய பெயரில் ஒரு எழுத்துப்பிழை இருந்ததை கடைசி நேரத்தில் கண்டுபிடித்துள்ளார்.

‘இ சேவை’ மையம் மூலம் புதிதாக பிறப்பிட சான்றிதழ் விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தார். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் ஆனது சான்றிதழ் கிடைக்கவில்லை. அப்போதுதான் தெரிந்தது சான்றிதழ் கிடைக்க பொதுவாக பத்து பதினைந்து நாட்கள் ஆகும் என்று. அதனால் தான் மாணவி உட்பட அந்த குடும்பத்திற்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் பலரிடம் கேட்டுள்ளார் அந்த மாணவி.

அந்த நேரத்தில் இந்தத் தகவலை தெரிந்த அவரது தோழி ஒருவர், தனது தந்தையிடம் கூறியிருக்கிறார். அவர் தனக்கு தெரிந்த வழக்கறிஞரான சென்னியப்பனிடம் கூற, அதிகாரிகளின் மேல்மட்டம் நினைத்தால் தான் இந்த சான்றிதழ் பிழையை சரி செய்து உடனே கொடுக்க முடியும் என்பதை முடிவு செய்த அவரின் கவனத்தில் வந்தவர், கல்விக்காக யார் உதவி கேட்டாலும் உடனே செய்யும் சுபாவம் கொண்டவரான உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். ஏழை விவசாயின் மகளின் நிலையை அவரிடம் கூறினார்.


உதயசந்திரன் ஈ-மெயில் மூலம் விபரங்கள் பெற்று சற்றும் தாமதிக்காமல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனை தொடர்பு கொண்டு அந்த மாணவிக்கு ஒரே நாளில் மருத்துவ கலந்தாய்வுக்கு செல்வதற்கு மேற்படி பிறப்பிட சான்றிதழ் வழங்கி உதவும்படி கேட்டிருக்கிறார். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவனும், மாவட்ட நிர்வாகமும் இதற்கென தனியாக அதிகாரிகள் குழுவை நியமித்து 17ஆம் தேதி ஒரே நாளில் சில மணி நேரங்களில் அந்த மாணவிக்கு புதிதாக பிறப்பிடச் சான்றிதழ் வழங்கி அந்த மாணவியின் மருத்துவ கல்விக்கு உதவி புரிந்துள்ளார்கள்.


"இது உரிய காலத்தில் செய்த உதவி, இந்த பணியில் ஈரோடு வருவாய் வட்டாட்சியர் திருமதி.பரிமளம் மதிய உணவுக்கு கூட செல்லாமல் மாலை நாலு மணிவரை இருந்து உதவிகளை செய்திருக்கிறார். அதேபோல் மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளர் பாலாஜி அவசர கால பிரிவில் பணியாற்றும் கோகிலவாணி என மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி எல்லோரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய சிறப்பு என்னவென்றால் உதயச்சந்திரன் ஐஏஎஸ், ஈரோடு மாவட்டத்தை சார்ந்தவர் அல்ல, தற்போது கல்வித்துறை அலுவலரும் அல்ல, வருவாய்த்துறை அலுவலரும் அல்ல. சுமார் ஓராண்டு காலம் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக கடந்த 2007ல் பணியாற்றியவர். அதன் பிறகு எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள் வந்திருக்கிறார்கள், போயிருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்திலேயே கல்விக் கடன் வழங்கியதில் இவர் ஈரோட்டில் இருந்த அந்த ஓராண்டு காலத்தில் மிகப் பெரிய சாதனை படைத்திருக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் கல்வி உதவி என்றால் இன்றைக்கும் உதயசந்திரன் தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.


எவ்வளவோ பணிகளுக்கிடையில் இயங்கிக் கொண்டிருக்கிற ஊரடங்கு சூழலில் யாருக்கும் தெரியாமல் இப்படிப்பட்ட கல்விக்கான உதவிகளை எப்போதும் செய்துகொண்டுதான் இருக்கிறார். இவரது உதவியால் உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டு அந்த மாணவி மருத்துவராகிறார். சான்றிதழ் கிடைத்துவிட்டது என்று தகவல் வரும் வரை அவ்வப்போது இடையிடையே தொடர்பு கொண்டு கேட்டறிந்து உதவினார்" என்றார் வழக்கறிஞர் சென்னியப்பன்.


"நாங்கள் ஏழை விவசாய குடும்பம். வெளி உலகம் எதுவும் அவ்வளவாக எங்களுக்கு தெரியாது; எனது சான்றிதழ் சரியில்லையென்றால் கலந்தாய்விலேயே நான் கலந்து கொள்ள முடியாமல் எனது மருத்துவ கனவு சிதைந்து போயிருக்கும். என் வாழ்வில் மிகப் பெரிய நம்பிக்கையை விதைத்துவிட்டார் உதயச்சந்திரன் ஐயா அவர்கள்." என்றார் மாணவி கோபிகா.


இந்த மாணவியின் சான்றிதழ் விஷயம் சம்பந்தமான தகவல் உதயச்சந்திரனுக்கு சென்றபோது தனது தந்தை இறந்த மீளா துயரில் சொந்த ஊரான நாமக்கல்லில் இருந்திருக்கிறார். அந்த நிலையிலும் கல்வி உதவியை செய்து ஒரு குடும்பத்திற்கு ஒளி கொடுத்துள்ளது நெகிழ்வானது பாராட்டப்பட வேண்டியது.


"தமிழ் சமூகத்தின் அடுத்த தலைமுறை அறிவாற்றல் மிக்கதாக அனைத்து துறைகளிலும் முதன்மையானதாக கொண்டு செல்வது தானே நமது பணி" என உதயசந்திரன் புன்னகையுடன் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT