ADVERTISEMENT

முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்! கணவன் - மனைவி இருவரையும் கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை! 

01:17 PM May 27, 2020 | rajavel

ADVERTISEMENT


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ளது உலகப் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் பௌர்ணமியன்று சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் திருநங்கைகள் பல மாநிலங்களிலிருந்து வருகை தந்து கலந்து கொள்வார்கள். அரவான் கோவில் அமைந்துள்ள ஊர் குவாகம்.

ADVERTISEMENT


இந்த ஊரைச் சேர்ந்தவர் 55 வயதாகும் ராமசாமி. இவரது மனைவி 45 வயது ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர். ராமசாமிக்கு குவாகம் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம், அதே ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் விவசாய நிலத்தில் ஒரு வீடும் உள்ளது. தம்பதி இருவரும் விவசாயம் செய்துகொண்டு நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு சுமார் இரவு பதினோரு மணி அளவில் முகமூடி அணிந்த பத்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி தம்பதிகள் இருவரையும் தாக்கியுள்ளனர். அதோடு அவர்கள் வாயில் துணியை வைத்து அடைத்தனர். கயிறுகளால் அவர்கள் இருவரின் கை கால்களைக் கட்டிப்போட்டு விட்டு, பீரோவில் இருந்த பணம் நகைகளைச் சாவகாசமாகக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


முகமூடி கொள்ளையர்கள் சென்றதும் கணவன் மனைவி இருவரும் சிரமப்பட்டு அவர்களாகவே கட்டை அவிழ்த்துவிட்டு, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டனர். தகவலறிந்து அப்பகுதியில் இருந்த மக்கள் ஓடிச்சென்று சென்று பார்த்துள்ளனர். திருடர்கள் அதற்குள் தப்பிவிட்டனர் தகவலறிந்த உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் விஜி, சப் இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் 23 சவரன் நகைகள், இரண்டு லட்சத்தி எண்பத்தி ஐயாயிரம் ரூபாய் பணம், அவர்களது வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் கார்டு ஆகியவற்றைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகிறனர். கணவன் மனைவியைக் கட்டி போட்டுப் பணம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் குவாகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT