ADVERTISEMENT

மரண படுக்கையில் கணவர்; நிலத்தை அபகரிக்க வெற்று பத்திரத்தில் ரேகை உருட்டிய அண்ணன் குடும்பத்தினர்; மனைவி கண்ணீர் புகார்!

08:15 AM May 05, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மரணப்படுக்கையில் கிடந்த கணவரிடம் அவருடைய அண்ணனும், உறவினர்களும், சொத்தை அபகரிக்கும் நோக்கில் வெற்று பத்திரத்தில் கையெழுத்து, கைரேகைகளும் உருட்டியதாக சேலம் பெண் புகார் அளித்துள்ளார்.

மேட்டூர் சின்ன கம்மம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி அலமேலு (வயது 32). பி.ஏ., பட்டதாரி. இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கணேசன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவருடைய வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளது. கணவரின் சிகிச்சை செலவுக்காக அலமேலு, தனக்குத் தெரிந்த சிலரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தார்.

இந்த நிலையில், சேலம் காந்தி சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மே 14- ஆம் தேதி கணேசனை சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனையில், அவருடைய இரண்டு சீறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே, கணேசனின் அண்ணன் ரத்னம், அவருடைய மகன் ரவீன்குமார், மகள் உஷாராணி, இவருடைய கணவர் அருள் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். கணேசனை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், ஓய்வு எடுத்துவிட்டு வரும்படியும் கூறி, அலமேலுவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஓரிரு நாள்கள் கழித்து அலமேலு, மருத்துவமனைக்கு வந்தார். அங்கு கணவரின் உறவினர்கள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரின் படுக்கைக்கு பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள், கணேசனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்காக கையெழுத்துப் போடுமாறும் கூறி உறவினர்கள் அவரிடம் சில பத்திரங்களில் கையெழுத்து மற்றும் கைரேகையைப் பெற்றதாக கூறியுள்ளனர்.

கணவர் பெயரில் சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அவருடைய உறவினர்கள் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து, கைரேகை பெற்றிருப்பதாக சந்தேகம் அடைந்தார். இதையடுத்து அலமேலு, சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முதல்கட்டமாக கணேசன் கையெழுத்திட்ட ஒரே ஒரு வெற்றுத்தாள் மட்டும் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட காணொலி பதிவுகள், கைரேகை பதிவு செய்யப்பட்ட பத்திரங்களையும் உடனடியாக சமர்ப்பிக்கும்படி ரத்தினத்தை எச்சரித்தனர். இது ஒருபுறம் இருக்க, கணேசனுக்கு உடல்நலம் மேலும் மோசம் அடைந்தது. சிகிச்சை பலனின்றி அவர் ஏப். 18ம் தேதி இறந்துவிட்டார். அங்கு வந்த ரத்தினத்தின் குடும்பத்தினர், சடலத்தை எடுக்க விடாமல் தகராறு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள், அவர்களை சமாதானப்படுத்தி, சடலத்தை அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் அலமேலு, சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புதன்கிழமை (மே 4) வந்தார். அவர் எஸ்பியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், என்னுடைய கணவரை ஏமாற்றி வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டு, எனக்கு கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT