ADVERTISEMENT

கணவன் கடன் வாங்கியதால் மனைவியை சிறை பிடித்த அரசியல் பிரமுகர் கைது! 

08:35 AM Mar 20, 2020 | santhoshb@nakk…

சேலத்தில், கணவர் வாங்கிய கடனை வசூலிக்க, அவருடைய மனைவியை சிறைபிடித்து மிரட்டிய தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சியின் தலைவர் பூமொழியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் சாலையைச் சேர்ந்தவர் பத்ரி ஸ்ரீனிவாசன். ஜவுளித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஹரிணி (43). இவர், சேலம் கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT


சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகரைச் சேர்ந்த பூமொழி என்கிற முகமது இப்ராஹிம் (40) என்பவருக்கும், என் கணவருக்கும் தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது.

திடீரென்று ஒருநாள் பூமொழி, எனது கணவர், அவரிடம் வியாபாரத்திற்காக 18 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாவும், அதை உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார். என் கணவர் பூமொழியிடம் அவர் குறிப்பிடும் அளவுக்கு எந்த கடனும் வாங்கவில்லை. இதையடுத்து எனது கணவர் அவரை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக மார்ச் 12ம் தேதி, ஸ்ரீரங்கத்தில் இருந்து சேலம் செல்வதாகக் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. என் கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.


மறுநாள் (மார்ச் 13) காலையில் பூமொழி எனக்கு போனில் தொடர்பு கொண்டு, என் கணவர் சேலம் வரவில்லை என்றும், அவர் வரவில்லை என்றால் பத்து பேருடன் எங்கள் வீட்டிற்கு வருவேன் என்று மிரட்டினார். அதனால் என் கணவரைத் தேடி நான் அன்று மதியம் சேலம் சீலநாயக்கன்பட்டிக்கு வந்து சேர்ந்தேன்.


நான் சீலநாயக்கன்பட்டிக்கு வந்து சேர்ந்ததை எப்படியோ அறிந்து கொண்டு, அங்கு வந்த பூமொழி, என்னை பலவந்தப்படுத்தி அவருடைய வீட்டுக்கு ஆட்டோவில் கடத்திச்சென்றார். என்னை அவருடைய வீட்டில் நான்கு நாள்களாக அடைத்து வைத்து மிரட்டினார்.


நான் சிறைவைக்கப்பட்ட தகவல் அறிந்த என் தாயார், சித்தப்பா ரகுநாதன், சித்தி ரமா ஆகியோர் பூமொழி வீட்டில் இருந்து என்னை மீட்டனர். அப்போது பூமொழி என்னை சரமாரியாக தாக்கியதோடு, கத்திரிக்கோலால் இடது மணிக்கட்டு அருகில் அறுத்து கொல்ல முயன்றார். உறவினர்களையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். நாங்கள் கூச்சல் போடுவதைக் கேட்டு அங்கு அக்கம்பக்கத்தினர் கூடியதால் பூமொழி தப்பி ஓடிவிட்டார்.


பூமொழி, ஏதோ கட்சித்தலைவராக இருக்கிறார் என்று கேள்விப்பட்டதால் பயந்து கொண்டு நான் புகார் அளிக்காமல் இருந்தேன். உறவினர்கள் அளித்த தைரியத்தால் இப்போது புகார் அளிக்கிறேன். இவ்வாறு ஹரிணி தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.


இதையடுத்து, கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் வியாழக்கிழமை (மார்ச் 19) நாராயண நகரில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து பூமொழியைக் கைது செய்தனர். கைதான பூமொழி என்கிற முகமது இப்ராஹிம், தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சியைத் தொடங்கி, அதன் மாநிலத் தலைவராகவும் இருந்து வருகிறார்.


அவர் மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச்சட்டப் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளத்து. அத்துடன், பெண்ணை சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், லேசான காயத்தை விளைவித்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவரை, சேலம் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில், பூமொழியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


இவர் மீது கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் 25- க்கும் மேற்பட்ட வழக்குகள் இதற்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT