ADVERTISEMENT

கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை; மகள்களுக்கு எழுதிய உருக்கமான கடிதங்கள் சிக்கின!

11:06 AM Apr 17, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடன் நெருக்கடியால் கோவையைச் சேர்ந்த கணவன், மனைவி சேலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு முன்பாக அவர்கள் தங்கள் மகள்களுக்கு எழுதி வைத்த மூன்று உருக்கமான கடிதங்கள் சிக்கின.

கோவை பீளமேடு கோபால் நகரைச் சேர்ந்தவர் மோகன்பாபு (57). இவருடைய மனைவி ஜெயந்தி (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மோகன்பாபுவும் அவருடைய மனைவியும் ஏப்.5 ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமாகினர். இதுகுறித்து பீளமேடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஏப்.11 ஆம் தேதி அதிகாலை, மோகன்பாபு தன் மனைவியுடன் சேலத்திற்கு வந்துள்ளார். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினர்.

மறுநாள் முதல் அவர்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், ஏப். 14 ஆம் தேதி மாலையில் பள்ளப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் அங்கு வந்து சம்பந்தப்பட்ட அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, முன்பகுதியில் உள்ள அறையில் ஜெயந்தியும், கழிவறையில் மோகன்பாபுவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அந்த அறையில் இருந்து மோகன்பாபு எழுதி வைத்திருந்த 3 தற்கொலை குறிப்பு கடிதங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதங்களில் கூறப்பட்டு இருந்த விவரம்: அன்பான என் மகள்கள் ரம்யா, அபர்ணா ஆகிய இருவருக்கும் எழுதிக் கொள்வது என்னவென்றால், முழுக்க முழுக்க இந்த முடிவுக்கு உங்கள் அப்பாவான நானே காரணம். நீங்கள் ஒன்றை புரிந்து கொள்வது இந்த தருணத்தில் நல்லது. நான் எப்போதும் உங்கள் இருவரையும் மற்றும் உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லியோ எங்கும் கடன் பெறவில்லை. நான் யாருக்கும் உங்கள் செல்போன் நம்பர்கள் கொடுக்கவில்லை. நான் கடன் வாங்கிய விவரங்களில் 90 சதவீதம் உங்கள் அம்மாவுக்குக்கூட தெரியாது. இப்போது என் பிரச்சனைகளை அம்மாவிடம் சொல்லி, நாங்கள் எவ்வகையிலும் இனி மீள முடியாது என்று நன்றாக தெரிந்ததால் இந்த முடிவை எடுத்தோம். என்னை நம்பி மட்டுமே கடன் கொடுத்தார்களே தவிர, வேறு யாரையும் நம்பி கடன் கொடுக்கவில்லை. வாங்கிய கடனுக்கு மேல் நான் வட்டி கட்டிவிட்டேன்.

வட்டி வட்டி என்று மேலும் கடன் வாங்கி வட்டி கொடுத்ததால் தான் இந்த நிலைமை என்று புரிந்து கொண்டேன். ஆகையால் இனி தாங்க முடியாது என்றுதான் இந்த முடிவு. எங்களை மன்னித்து விடுங்கள். நான் வாங்கிய கடனுக்கு என்னைத் தவிர வேறு யாரும் பொறுப்பு இல்லை. வேறு எங்கும் என் அனுபவத்தில் நான் பார்த்திராத அரிய குணங்களும், பண்புகளும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்புகளும் நிறைந்த உங்களை விட்டுச் செல்கிறோம். நீங்கள் இருவரும் உங்கள் குடும்பத்தாரிடம் நன்றாக நடந்து கொள்வீர்கள். உங்கள் இருவரின் மாமனார், மாமியார் ஆகியோரை தாய், தந்தையாக நினைத்து அவர்களை எந்த காலத்திற்கும் பார்த்துக் கொள்வீர்கள். இந்த ஊரிலேயே எங்கள் உடல்களை தகனம் செய்து விடவும். இவ்வாறு ஒரு கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

மற்றொரு கடிதத்தில், ''அம்மா எழுதிக் கொள்வது. என்னைப் பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு நல்ல கணவர்கள் மற்றும் மாமனார், மாமியார் அமைந்து உள்ளார்கள். நீங்கள் இருவரும் மற்றும் உங்கள் குடும்பத்தாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தது. இன்னொரு கடிதத்தில், ''காவல்துறை அதிகாரி அவர்களுக்கு, மோகன்பாபு ஆகிய நானும், ஜெயந்தி ஆகிய என் மனைவியும் எழுதிக் கொள்வது. எங்கள் சாவுக்கு யாரும் பொறுப்பு அல்ல. நாங்களே சுயமாக எடுத்த முடிவு என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். கடன் பிரச்சனையால் இந்த முடிவுக்கு வந்தோம்'' என்று எழுதியிருந்தனர்.

சடலங்களை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூராய்வு முடிந்த பிறகு, இரு சடலங்களும் அவர்களின் மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தபடியே, இருவரின் சடலங்களும் சேலம் காக்காயன் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT