ADVERTISEMENT

மனைவியைக் கொன்ற இடத்திலேயே கணவர் தற்கொலை! திண்டிவனத்தில் பரபரப்பு...

02:38 PM Jul 13, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவனும் அதே இடத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே கொடியும் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (70). இவரது இரண்டாவது மனைவி (45) வண்ணமயில். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் மூத்தமகள் ராஜாமணி நொளம்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இளைய மகள் மணிமேகலை சென்னையில் பணிபுரிந்து வருகிறார். சுப்பிரமணியின் முதல் மனைவி தனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு மனோன்மணி என்ற மகளும் மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர் இவர்கள் இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர்.

சுப்பிரமணிக்கு இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்துள்ளது. இந்த நிலத்தை முதல் மனைவியின் மகன் மணிகண்டன் பெயரில் எழுதி வைத்துள்ளார். இதனால் இரண்டாவது மனைவி வண்ணமயிலுக்கும் சுப்பிரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி வண்ணமயிலுக்கும் சுப்பிரமணிக்கு ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணி கத்தியால் வண்ணமயிலை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வண்ணமயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அப்போது சுப்பிரமணியம் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் அருகிலிருந்தவர்கள் தடுத்துக் காப்பாற்றியுள்ளனர். இது சம்பந்தமான வழக்கில் சுப்பிரமணி கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியில் வந்த சுப்பிரமணி நேற்றுமுன்தினம் இரவு அவரது இரண்டாவது மனைவி வண்ணமயிலைக் கொலை செய்த இடத்தின் அருகில் உள்ள மரத்தில் தனது வேஷ்டியின் மூலம் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் சுப்பிரமணி உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மனைவியைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வந்த அவரது கணவர், மனைவியைக் கொலை செய்த இடத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தக் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT